* பழங்குடியினத்தை சேர்ந்தவருக்கு முதல் முறையாக வாய்ப்பு * எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டிபுதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலுக்கு பழங்குடியின பிரிவை சேர்ந்தவர் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம், ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில், ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணி சார்பிலும், எதிர்க்கட்சிகள் சார்பிலும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடந்தன. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த 15ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. 22 எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு விடுத்த நிலையில் 17 கட்சிகள் பங்கேற்றன. இதில், தேசியவாத காங்கிரஸ் தலைவர்சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. ஆனால், இவர்கள் மூவருமே போட்டியிட விருப்பமில்லை என மறுத்து விட்டனர். இந்நிலையில், சரத் பவார் தலைமையில் டெல்லியில் மீண்டும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூனா கார்கே, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோரும், திமுக சார்பில் திருச்சி சிவா எம்பி, திரிணாமுல் காங்கிரசின் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி, தேசிய மாநாட்டுக் கட்சி, ஏஐஎம்ஐஎம், ஆர்ஜேடி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, உட்பட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக, நேற்று முன்தினம் கோபால கிருஷ்ண காந்தியும் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, தனது கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா பெயரை திரிணாமுல் காங்கிரஸ் பரிந்துரைத்தது. இதுதொடர்பாக நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.பின்னர், யஷ்வந்த் சின்காவை பொது வேட்பாளராக தேர்வு செய்ய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக முடிவு செய்தன. இது குறித்து கூட்டறிக்கையை வாசித்த ஜெய்ராம் ரமேஷ், ‘‘மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகத் தன்மையை நிலைநிறுத்துவதற்கு யஷ்வந்த் சின்கா மிகவும் தகுதியானவர். ராஷ்டிரபதி பவனுக்கு செல்ல தகுதியான நபர். இவர், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எதிர்வரும் மாதங்களில் மேலும் பலப்படுத்தப்படும்,’’ என்றார்.இக்கூட்டத்தில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, பிஜூ ஜனதா தளம், ஆம் ஆத்மி, சிரோண்மனி அகாலி தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய 5 மாநில கட்சிகள் பங்கேற்கவில்லை. இக்கட்சிகள் ஏற்கனவே மம்தா கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நிலவுவதால் சிவசேனாவும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு வரவில்லை. எதிர்க்கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 8 மணி அளவில் பாஜ நாடாளுமன்ற குழு கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த கூட்டத்தில், பழங்குடியின பெண் தலைவரான திரவுபதி முர்முவை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜே.பி.நட்டா அறிவித்தார். இந்திய வரலாற்றில் இதற்கு முன் பழங்குடியின பிரிவை சேர்ந்த யாரும் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டது இல்லை. அதுவும், ஒரு பழங்குடியின பெண் தலைவர் ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பது வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாஜ மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் 29ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்.பழங்குடி தலைவர்* பாஜ கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள முர்மு, ஒடிசாவில் உள்ள பய்டாபோசி என்ற பழங்குடி கிராமத்தில் பிறந்தவர்.* சாந்தல் என்ற பழங்குடி பிரிவை சேர்ந்தவர். * வயது 64.* பாஜ.வில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர், பல போராட்டங்களை சந்தித்தவர். கவுன்சிலர் பதவியில் தொடங்கி, படிப்படியாக பல்வேறு முக்கிய பதவிகளுக்கு உயர்ந்தவர். * ஒடிசாவில் பாஜ – பிஜூ ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்தபோது, கடந்த 2000ம் ஆண்டு முதல் 2002 வரை மாநில அமைச்சராக பதவி வகித்துள்ளார்.* ஒடிசாவில் 2000, 2009ம் ஆண்டுகளில் ராய்ரங்க்பூர் தொகுதியில் இருந்து 2 முறை பாஜ எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். * இவர் ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநராக கடந்த 2015ல் நியமிக்கப்பட்டார். 2015 முதல் 2021 வரை முழு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்து, இந்த சாதனையை புரிந்த முதல் பழங்குடியின பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார்.* கடந்த 2017ம் ஆண்டிலேயே இவருடைய பெயரை ஜனாதிபதி வேட்பாளராக பாஜ பரிசீலனை செய்தது. பின்னர், அந்த வாய்ப்பு தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த ராம்நாத் கோவிந்த்துக்கு அளிக்கப்பட்டது.* தற்போது பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில், பாஜ.வின் ஜனாதிபதி வேட்பாளராக முர்மு அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.தீவிர மோடி எதிர்ப்பாளர்தற்போது 84 வயதாகும் யஷ்வந்த் சின்கா, பீகாரின் பாட்னாவை சேர்ந்தவர். 1960 முதல் 24 ஆண்டுகள் ஐஏஎஸ்.சாக பணியாற்றியவர். பின்னர், 1984ல் ஜனதா கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் இணைந்தார். 1986ல் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1988ல் மாநிலங்களவை எம்பியாகவும் ஆனார். 1990 முதல் 1991 வரை சந்திர சேகர் அரசில் ஒன்றிய நிதி அமைச்சராக இருந்துள்ள யஷ்வந்த் சின்கா, 1998ல் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், 2002 முதல் 2004 வரை வெளியுறவு அமைச்சராகவும் பதவி வகித்தார். பாஜ மூத்த தலைவர் அத்வானியின் பெரும் விசுவாசியாக இருந்த யஷ்வந்த் சின்கா ஆரம்பம் முதலே கட்சியில் முக்கிய பிரச்னைகளில் எதிர்ப்பு குரல் கொடுக்கும் தலைவராக இருந்துள்ளார். மோடி பிரதமரான பிறகு 2014ல் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். 2018ல் அக்கட்சியில் இருந்து விலகினார். 2021ல் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். பிரதமர் மோடியையும், அவர் தலைமையிலான பாஜ ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்தார். திரிணாமுல்லில் இருந்து விலகல் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, திரிணாமுல்லில் இருந்து யஷ்வந்த் விலகினார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பலப்படுத்துவதற்காக கட்சிப் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.யாருக்கு வாய்ப்பு?ஜனாதிபதி தேர்தலில் 4,809 எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களின் மொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431. இதில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்கு பெறுவர் வெற்றி பெறுவார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 48 சதவீத வாக்குகள் உள்ளன. இன்னும், 13,000 மதிப்பிலான வாக்கு மட்டுமே பாஜவுக்கு தேவை. இதற்கு பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற சில மாநில கட்சிகள் ஆதரவு அளித்தால், பாஜ வேட்பாளர் வெற்றி பெற்று விடலாம். ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 5 மாநில கட்சிகள் பங்கேற்காததால், பாஜ வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், பாஜவின் ராம்நாத் கோவிந்த்திடம் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட மீரா குமார் 3 லட்சத்து 34 ஆயிரத்து 730 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.