நேஷனல் ஹெரால்டு வழக்கு விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 5-வது முறையாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் இன்றும் போராட்டம் நடத்தினர். முன்னதாக அமலாக்கத்துறைக்கு எதிராக ஏற்கெனவே காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில், போலீஸார் கடுமையாக தாக்கினர் என எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், டெல்லியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், காங்கிரஸ் தலைவருமான அல்கா லம்பா, போராட்டத்தின்போது போலீஸார் தன்னிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோவில், `பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என அல்கா லம்பா முழக்கமிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது மகளிர் போலீஸ் ஒருவர் அவரை நகர்த்த முயல்கிறார். அதற்கு, `ஏன் என் கழுத்தைப் பிடிக்கிறீர்கள்? என்னை விட்டுவிடச் சொல்லுங்கள். என்னிடம் என்ன இருக்கிறது? என்னிடம் AK-47 இருக்கிறதா? என்னிடம் வெடிகுண்டு இருக்கிறதா? நான் ஆயுதமற்றவள்’ என அங்கிருந்த செய்தியாளர்கள் முன்னிலையில் கூச்சலிடுகிறார். மேலும் தொடர்ந்து அக்னிபத் திட்டத்தை விமர்சித்துப் பேசிய அல்கா லம்பா, `4 வருட பயிற்சிக்குப் பிறகு அக்னி வீரர்களை வெளியே அனுப்பினால், அவர்களும் இப்படித்தான் பாதுகாப்பற்றவர்களின் கழுத்தை உடைப்பார்கள். டெல்லி போலீஸ் என் கழுத்துப் பகுதியில் தாக்கி, என் கழுத்தை உடைக்கப் பார்க்கிறது’ என சாடுகிறார்.
ஏற்கெனவே காங்கிரஸ் எம்.பி மற்றும் தொண்டர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசை சாடிவரும் நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அல்கா லம்பாவின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.