கிராம பஞ்சாயத்து செயலாளர் ஒருவர் தனக்கு மூன்றாவதாக மனைவி இருப்பதை மறைத்ததை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய பிரதேச அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் சிங்ரவ்லி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்தின் செயலாளராக இருப்பவர் சுக்ராம் சிங். இவருக்கு குசும்காலி மற்றும் கீதா சிங் என இரு மனைவிகள் உள்ளனர்.
சிங்ரவ்லியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பிபர்காட் கிராம பஞ்சாயத்து தேர்தலில் சார்பஞ்சாயத்துதாரர் பதவிக்காக
குசும்காலியும், கீதா சிங்கும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் பெட்ராவில் உள்ள ஜனபத் கிராம பஞ்சாயத்து தேர்தலில் சுக்ராம் சிங்கின் மூன்றாவது மனைவியும் போட்டியிடுகிறார். தனக்கு மூன்றாவதாக ஊர்மிளா என்ற மனைவி இருப்பதை வெளியே தெரியப்படுத்தாமல் இருந்திருக்கிறார்.
ஆனால், பஞ்சாயத்து அதிகாரிகள் தங்களது குடும்ப உறவினர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற மத்திய பிரதேச அரசின் அறிவிப்பால் சுக்ராமின் இந்த குட்டு வெளிப்பட்டிருக்கிறது.
அதன்படி, சுக்ராம் குசும்காலி மற்றும் ஊர்மிளாவின் தகவல்களை மட்டும் தெரிவித்துவிட்டு கீதா சிங் குறித்து குறிப்பிடாமல் இருந்திருக்கிறார் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். ஆனால் தேர்தலில் போட்டிடுவதற்கான மனுவில் மூன்று பெண்களும் தங்களது கணவர் சுக்ராம் சிங்தான் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக அறிந்த தேர்தல் அதிகாரிகள், தனக்கு மூன்றாவதாக மனைவி இருப்பதை மறைத்ததற்காக சுக்ராம் சிங்கை கடந்த ஜூன் 19 அன்று பணியிடை நீக்கமும் செய்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக நோட்டீஸும் விடுத்துள்ளனர். ஆனால் சுக்ராம் சிங் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
“சொத்துகளை அபகரித்துவிட்டு மகன் கொடுமைப்படுத்துகிறார்”.. முதிய தம்பதி கண்ணீர் மல்க பேட்டி!
இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள சுக்ராம் சிங் (55), “என்னுடைய 5 அல்லது 6 வயதில் இருக்கும் போது என்னுடைய பெற்றோர்கள் எனக்கும் குசும்காலிக்கும் குழந்தை திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் நானும் குசும்காலியும் பிரிந்துவிட்டோம். 12ம் வகுப்பு முடித்த பிறகு கீதா சிங்கை திருமணம் செய்துக்கொண்டேன்.
பழங்குடியாக இருப்பதால் 2 திருமணம் செய்துக்கொள்ள கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் ஊர்மிளா என்னுடைய மனைவி இல்லை. அவர் ப்ரிஹஸ்பத் என்பவரின் மனைவி. அவரிடம் இருந்து பிரிந்து வந்து என்னுடன் இருக்கிறார். ஆனால் அவரை நான் மணமுடிக்கவில்லை.
என் மீதான சஸ்பென்சன் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல. தேர்தலில் போட்டியிடும் மூவரி எவரையும் நான் ஆதரிக்கவில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவெடுக்க முடியவில்லை” என டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் சிங்ரவ்லி மாவட்ட மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
ALSO READ:
”பணம் செலுத்திய பிறகும் நோட்டீஸா?”..குடும்பத்துடன் நடிகர் ஹலோ கந்தசாமி போலீசில் புகார்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM