நாக்பூர்: தேர்வுக்கு தயாராகும் நாட்கள் குறைவாக உள்ளதால் இளநிலை ‘நீட்’ தேர்வை ஒத்திவைக்க வேண்டும்! என்று பிரதமர் மோடிக்கு தேசிய பெற்றோர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. மாணவர்களும் டுவிட்டரில் ஹேஷ்டாக் அமைத்து டிரெண்டிங் செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டிற்கான இளநிலை நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடக்க உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்த மாத இறுதியில் ஆன்லைனில் விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கைகள் முடிவுக்கு வருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு அட்மிட் கார்ட், தேர்வு மையம், செய்தி அறிவிப்புச் சீட்டு (எ) இண்டிமேஷன் ஸ்லிப் ஆகியவை தரப்படும். இதில் இண்டிமேஷன் ஸ்லிப் அடுத்த வாரத்திலும், அட்மிட் கார்ட் ஜூலை முதல் வாரத்திலும் வழங்கப்படக்கூடும் என்று தெரிகிறது. மேலும் விபரங்களுக்கு, neet.nta.nic.in என்ற தளத்தில் நீட் தேர்வு தொடர்பான அப்டேட்களை காணலாம்.இந்நிலையில் நீட் இளநிலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தேசிய அளவிலான பெற்றோர் சங்கம் (ஐடபிள்யூபிஏ) கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘தேர்வுக்கு தயாராகும் நாட்கள் குறைவானதாக இருப்பதால் இளநிலை நீட் தேர்வை வரும் ஜூலை 17ம் தேதி என்பதில் இருந்து வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்கண்ட சங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான அனுபா வஸ்தவா சஹாய் கூறுகையில், ‘இந்த கல்வியாண்டுக்கான படிப்புகள் வரும் 2023 பிப்ரவரி மாதத்திற்குள் தொடங்காது. பிறகு எதற்காக மாணவர்களை தேர்வில் கலந்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்? நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி பல மாணவர்கள் ஒன்றிய கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்; ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை’ என்றார். மாணவர்கள் தரப்பில் கூறுகையில், ‘மாணவர்களின் நலன் கருதி தேர்வை குறைந்தது 40 முதல் 45 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். கடந்த ஆண்டு மாணவர்களுக்கு தேர்வை ஒத்திவைத்து உதவி செய்தது போல், இந்த ஆண்டும் மாணவர்களுக்கும் உதவ வேண்டும். வரும் ஜூலையில் தேர்வை நடத்திய பிறகு பிப்ரவரி வரை மாணவர்கள் ஏன் காத்திருக்க வேண்டும். அதனால் தேர்வை ஒத்திவைத்தால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாக இருக்கும். இந்தாண்டு ஆகஸ்ட் கடைசி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்திற்கு தேர்வை ஒத்திவைக்க வேண்டும். ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைத்தது போல், நீட் இளநிலை தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்’ என்று அவர்கள் கூறினர். மேலும் நீட் இளநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி கடந்த சில நாட்களாக #JUSTICEforNEETUG என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.