கன்னியாகுமரி: “தொடர்ந்து யோகாசனம் செய்வதன் மூலம் நாம் மிகப் பெரிய பலத்தை பெற முடியும்” என்று மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி கூறியுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டினைக் கொண்டாடி வருவதால் நாடு முழுவதும் 75 ஐகானிக் இடங்களில் சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன்21) கொண்டாடப்பட்டது. இவற்றில் மத்திய அமைச்சர்கள் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி கலந்து கொண்டார்.
விவேகானந்தர் தவம் செய்ததை நினைவுகூரும் வகையில் விவேகானந்தர் பாறையில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு மூலம் சென்றிருந்த அமைச்சர், விவேகானந்தர் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விவேகானந்தர் பாறையில் அமர்ந்து யோகாசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் மீனாட்சி லேகி பேசும்போது, “யோகா செய்வதன் மூலம் மனம், உடல், ஆன்மா ஒருங்கிணைக்கப்படுகிறது. தொடர்ந்து யோகாசனம் செய்வதன் மூலம் நாம் மிகப் பெரிய பலத்தை பெற முடியும். நம்மை சுற்றி ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை யோகா பயிற்சியால் ஏற்படும்.
மிகப் பெரிய நாடான இந்தியா தியானத்தினால் சுதந்திரம் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை சுவாமி விவேகானந்தர் ஏற்படுத்தினார் . நாட்டின் கலாசாரத்திலும் ஆன்மிகத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் நாட்டின் கலாசாரத்திற்காக, நாட்டுக்காக தொடர்ந்து பாடுபட்டது போல், பிரதமர் மோடி தொடர்ந்து நாட்டு நலனுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய கலாசாரத்துறை இணைச்செயலர் சஞ்சிக்குட முத்கல், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.என். ஹரிஹரன் பிரசாத், மத்திய நினைவு சின்னங்கள் இயக்குனர் நவரத்தின கே ஆர் பதக், இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.