”தொண்டர்கள் கொதித்து போயுள்ளார்கள்; அசம்பாவிதம் நடக்கும்” – ஓபிஎஸ் சார்பில் போலீசில் மனு

அதிமுக பொதுக்குழுவுக்கு காவல்துறை அனுமதி தரக்கூடாது என காவல்துறையிடம் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக 2,500 பேர் கலந்து கொள்ள உள்ளதால் பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், போலீஸ் பாதுகாப்பு கேட்டு மூன்று முறை மனு அளித்தும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால், பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு டிஜிபி, ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டுமென தெரிவித்திருந்தார்.
image
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பொதுக்குழு கூட்டம் தொடர்பாக கேட்ட 26 கேள்விகளுக்கு இதுவரை அதிமுக தரப்பில் பதில் வரவில்லை என தெரிவித்தார். மேலும், பொதுக்குழு தொடர்பாக ஏதும் பிரச்னை என தெரிந்தால் ஒருங்கிணைபாளர் பன்னீர் செல்வம் காவல்துறையை நாடலாம் எனவும் தெரிவித்தார். ஒ.பி.எஸ். தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே அதிகாரம் உள்ளதால், அழைப்பாளராக கலந்துகொள்ள இருக்கும் பெஞ்சமின் இந்த வழக்கைத் தொடர அதிகாரம் இல்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அப்போது, பெஞ்சமின் பொதுக்குழு உறுப்பினர் இல்லையா என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு பொதுக்குழு உறுப்பினராக இருந்தாலும் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கு தொடர முடியாது என ஓபிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பொதுக்குழு கூட்டுவதில் உள்ள பிரச்னைகள் குறித்து காவல்துறையிடம் மனு அளிப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பெஞ்சமின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் 2600 பேருக்கும் அடையாள அட்டை மற்றும் வாகனங்களுக்கான பாஸ் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
image
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, காவல்துறையின் கேள்விகளுக்கு அதிமுக இன்று மதியம் 1 மணிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், பெஞ்சமின் அளிக்கும் பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு என அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, எம்.பி., எம்.எல்.ஏ. என யாராக இருந்தாலும் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறித்தி, அனைத்து தரப்புக்கும் தகுந்த பாதுகாப்பு அளித்து சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு காவல்துறை அனுமதி தரக் கூடாது காவல்துறையிடம் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “இருதரப்பினருக்கும் முரண்பாடுகள் உள்ளதால் பொதுக்குழுவில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு; கட்சியின் சட்டவிதிகளுக்கு மாறாக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் அனுமதி கேட்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
image
image
image
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்துடன் கூடிய இந்த மனு ஆவடி காவல் ஆணையரகத்தில் அளிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.