தாங்கள்தான் உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையத்திடம் ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு ஓபிஎஸ் வரவேண்டும் என்றும் தேனி உத்தமபாளையத்தில் அதிமுக ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை மறுநாள் சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இரட்டை தலைமையை ஒழித்துவிட்டு, சிறப்பு தீர்மானத்தின் மூலம் ஒற்றைத் தலைமையை கொண்டுவர கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்து வருகிறார்.
”கட்சியில் ஒற்றைத் தலைமை கொண்டுவந்தால், கட்சியில் பிளவு ஏற்பட்டு, தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி உருவாகி, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தற்போது நிலவக்கூடிய அசாதாரண சூழ்நிலையில் பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டும்” என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்றும் அதில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுக்குழு கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதை தடுக்கும் விதத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி கொடுக்கக்கூடாது என்று ஆவடி மாநகர காவல் ஆணையருக்கு ஓபிஎஸ் ஒரு மனு கொடுத்துள்ளார்.
இதைப் போன்ற ஒரு கடிதத்தை பொதுக்குழு நடைபெற உள்ள திருமண மண்டப நிர்வாகிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் பொதுக்குழுவை ரத்துசெய்ய கடைசி ஆயுதமாக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம்நாளை மனு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிக்கலாம்: ஓபிஎஸ் பலம் குறைகிறதா? எத்தனை மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM