சிகிச்சை ரகசியத்தை சொல்ல மறுத்த மைசூரு நாட்டு வைத்தியரை துண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்து ஆற்றில் வீசிய வழக்கில் தொடர்புடைய 5 முக்கிய குற்றவாளிகள் தமிழகத்தில் தலைமறைவாக உள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஷாபா செரீப் என்பவர் பைல்ஸ் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவரிடம் சிகிச்சை பெற்றவர்களுக்கு விரைவில் நோய் குணமானதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷாபா ஷெரீப் திடீரென மாயமானார்.இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் மைசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வருடங்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் நிலம்பூரைச் சேர்ந்த
ஷெபின் அஷ்ரப் என்ற தொழிலதிபர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது உதவியாளர் உட்பட 7பேர் வீடு புகுந்து தன்னை கட்டிப்போட்டு 7 லட்சம் ரூபாயினை கொள்ளையடித்து விட்டு சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து நிலம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷெபினின் உதவியாளரான நவ்ஷாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 6பேரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்களில் ஐந்து பேர் கடந்த மாதம் திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற போது திருவனந்தபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மைசூர் வைத்தியர் ஷாபா ஷெரீப் குறித்து ஷெபின் அஷ்ரபுக்கு தெரிய வந்ததை அடுத்து அவரை கடத்தி மிரட்டி சிகிச்சை ரகசியத்தை தெரிந்து கொண்டு அதிகப் பணம் சம்பாதிக்கலாம் என திட்டமிட்டது தெரிய வந்தது.
அதன்படி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வைத்தியர் ஷாபா ஷெரீப்பை மைசூரிலிருந்து கடத்திய ஷெபின் அஷ்ரப், அவரை ஊரில் உள்ள தன்னுடைய வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்து, சங்கிலியால் கட்டிப்போட்டு அடித்துக் கொடுமைப்படுத்தி சிகிச்சை ரகசியத்தை கூறுமாறு மிரட்டியது தெரிய வந்தது.
ஆனால் ஒரு வருடமாகியும் சிகிச்சை ரகசியத்தை சொல்ல மறுத்து வந்ததால் அவரை கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் அஷ்ரப் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி அங்குள்ள ஆற்றில் வீசியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையில் மைசூர் வைத்தியரை கொடுமைப்படுத்தும் ஒருசில வீடியோக்களை கைப்பற்றிய போலீசார்அதனை அவரது உறவினர்களுக்கு காண்பித்து வீடியோவில் இருப்பது ஷாபாஸ் ஷெரீப் தான் என்பதை உறுதிபடுத்தி கொண்டனர்.
பின்னர் இந்த வழக்கு சம்பந்தமாக அஷ்ரப் மற்றும் அவரது கூட்டாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இவர்களைத் தவிர முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் 5 பேர் தற்போது தமிழகத்தில் தலைமறைவாக இருப்பது கேரள போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் இல் இருந்து குற்றவாளி ஒருவர் பணம் எடுக்கும் சிசிடிவி காட்சிகள் கேரள போலீசாருக்கு கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து குற்றவாளிகளின் போட்டோவை வெளியிட்டு இவர்களை கண்டால் போலீசாருக்கு தகவலை தெரிவிக்குமாறு கேரளா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.