யுத்த காலத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டிருந்தாக கூறப்படும் 715 லீற்றர் மண்ணெண்ணையை முல்லைத்தீவு பாதுகாப்புப் படையினர் நேற்று (20) கைப்பற்றியுள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டுவதற்கு நிலத்தை தோண்டுவதற்காகச் சென்ற போது நிலத்தடியில் பிளாஸ்டிக் கேன் ஒன்று காணப்பட்டதையடுத்து ,புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதனையடுத்து, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம், மண்ணெண்ணெய் வைக்கப்பட்டிருந்த இடத்தை தோண்டி அதனை மீட்குமாறு முல்லைத்தீவு நீதிபதி ஆர்.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
ஏழு பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து புதைத்து வைக்கப்பட்டுருந்த மண்ணெண்ணெய், உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.