நீரிழிவு நோய் என்பது ஒரு நாட்பட்ட நோய் ஆகும். இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம்.
இதனை ஆரம்பத்திலே ஒரு சில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம். மேலும் யோகாசனங்களின் மூலம் கூட கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
தற்போது நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் 5 யோகாசனங்களை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
பவன முக்தாசனம்
முதலில் தரைவிரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு மூச்சை வேகமாக உள்ளே இழுக்க வேண்டும்.
இப்பொழுது உங்களுடைய வலது காலை மட்டும் மடக்கி மார்புப் பகுதிக்கு அருகில் கொண்டு வந்து முழங்காலுக்குக் கீழே இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளுங்கள்.
ஆனால் இடது காலை நீட்டியபடி தான் வைத்திருக்க வேண்டும்.
இதேநிலையில் படுத்துக் கொண்டு. கொஞ்சம் கொஞ்சமாக தலையையும் மார்பையும் முன்னோக்கி உயர்த்தியபடி தாடையை உயர்த்தியிருக்கும் முழங்காலால் தொட வேண்டும்.
இதை மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். அதன்பின் இதேபோன்று இடது காலுக்கும் செய்ய வேண்டும்.
மண்டுகாசனம்
கால் முட்டியை மடக்கி, மண்டியிட்டு செய்கின்ற ஆசனத்தின் பெயர் தான் மண்டுகாசனம்.
இந்த ஆசனத்தை செய்வதற்கான அடிப்படை நிலை வஜ்ராசனம். வஜ்ராசனத்தில் அமர்ந்து கொண்டு, உங்களுடைய இடுப்பு மற்றும் பிட்டப் பகுதியைக் கால்களின் மேல் அமர்த்தியபடி உட்கார வேண்டும்.
அடுத்து, கை முட்டிகளை மடித்துக் கொண்டு, அடிவயிற்றில் ஒட்டிய படி வைத்துக் கொண்டு உடலை முன்னோக்கி வளைக்க வேண்டும்.
உள்ளிழுத்த மூச்சை வெளியே விடும் போது அடிவயிற்றில் அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து அப்படியே வஜ்ராசன நிலைக்குத் திரும்ப வேண்டும்.
முதுகெலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் வயிற்றில் அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
பூர்வோத்தாசனம்
உங்க கால்களை முன்னோக்கி நீட்டியபடி உட்கார்ந்து கொள்ளுங்கள். பின்னர் இரண்டு கைகளாலும் தரையைத் தொட வேண்டும். அடுத்தபடியாக முழங்கால்களை மடக்காமல் நேராக வைத்தபடி இடுப்பு மற்றும் பிட்டப் பகுதியை மட்டும் உயர்த்திக் கொண்டு அப்படியே குனிந்தபடி இரண்டு கைகளையும் நீட்டி தரையைத் தொட வேண்டும்.
எவ்வளவு தூரம் உயர்த்த முடியுமோ அவ்வளவு தூரம் கைகளை உயர்த்தியபடி வைத்திருக்க வேண்டும். கை, கால்களால் முழு உடலையும் தாங்கிப் பிடிக்க வேண்டும்.
எவ்வளவு நேரம் இதே நிலையில் வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் வைத்திருந்து பின் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.
இதை மீண்டும் மீண்டும் 5-10 வரை செய்யலாம். தினசரி 10 நிமிடம் செலவிட்டால் போதும்.
பச்சிமோத்தாசனம்
ஒரு தரை விரிப்பில் இரண்டு கால்களையும் முன்னோக்கி நீட்டியபடி உட்கார்ந்து கொண்டு, மூச்சை நன்கு உள்ளே இழுத்துக் கொண்டே தலையைக் குனிய வேண்டும்.
இப்போது கால்களின் இரண்டு பெருவிரல்களால் இரண்டு உள்ளங்கால்களில் உள்ள விரல்களை பிடித்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது மூச்சை வெளியே விடுங்கள். மறுபடியும் உங்க உடலை முன்னோக்கி வளைத்து முழங்கைகளை முழங்காலில் தொடும்படி வைக்க வேண்டும். ஆனால் கால்களை மடக்கக் கூடாது. நேராக வைத்திருக்க வேண்டும்.