சென்னை: தமிழகத்தில் நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால், நெல் கொள்முதல் காலத்தினை அக்டோபர் 1-ம் தேதி துவங்குவதற்கு பதிலாக செப்டம்பர் 1-ம் தேதி முதலே நெல் கொள்முதல் துவங்கிட மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கு உத்தரவிடக் கோரி, பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தில், “சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக குறுவை சாகுபடிக்காக மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. 4,964.11 கி.மீ நீளத்திற்கு கால்வாய்களை தூர்வார ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு ரூ.61 மதிப்பிலான தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் நடவு பணிகளை ஜூன் மாதத்திற்கு முடிப்பார்கள். இந்த நேரத்தில் கரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்தியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வழக்கமாக நெல் அறுவைடை பணிகள் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும். ஆனால் இந்தாண்டு தமிழக அரசின் முயற்சியால் ஆகஸ்ட் இறுதியில் நெல் அறுவடை செய்ய முடியும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எனவே. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால், நெல் கொள்முதல் காலத்தினை அக்டோபர் 1ம் தேதி துவங்குவதற்கு பதிலாக செப்டம்பர் 1ம் தேதி முதலே நெல் கொள்முதல் துவங்கிட மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.