ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அரசுமருத்துவமனையின் தலைமை மருத்துவர் தன் மகனை மருத்துவம் பார்க்க சொல்லி விட்டு செவிலியர்களுடன் நீச்சல்குளத்தில் கும்மாளமிட்ட சம்பவம் புகாருக்குள்ளான நிலையில், மருத்துவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது..
கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த கவுந்தப்படி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரான தினகர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு விடுப்பு போட்டு விட்டு தனக்கு பதிலாக தகனது மகன் அஸ்வினை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
தலைமை மருத்துவர் தினகர் மருத்துவமனையில் இல்லாததோடு அங்குள்ள செவியர்களை அழைத்துக் கொண்டு போய் நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்டு பொழுதை கழித்ததாக புகைப்படம் வெளியானது
இதையடுத்து மருத்துவர் தினகர் மற்றும் அவரது மகன்அஸ்வின் மீது நோயாளி பரபரப்பு புகார் அளித்தார்.
இது குறித்து விளக்கம் அளித்த மருத்துவர் தினகர், ஞாயிற்றுக்கிழமை தனக்கு விடுமுறை நாள் என்பதால் தன்னுடன் பணிபுரியும் செவிலியர்களுடன் வெளியில் சென்றதாக தெரிவித்தார், மகனை சிகிச்சை அளிக்க வைத்தது ஏன் ? என்ற கேள்விக்கு அவரிடம் முறையாக பதில் அளிக்கவில்லை
இந்த புகார் குறித்து 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கோமதி, அரசு மருத்துவமனையில் அவரது மகன் அஸ்வினை பணி செய்ய வைத்தது விசாரணையில் உறுதியானதால் விரிவான விசாரணை அறிக்கை தயார் செய்து நடவடிக்கைக்காக , மாநில மருத்துவ பணிகள் இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார் .
மருத்துவர் தினகரின் மகன் அஸ்வின் செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த ஆண்டு தான் மருத்துவம் படித்து முடித்ததாக கூறப்படுகின்றது.