பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: கிரிமினல்களும், சில அரசியல் கனவுகளும் | மினி தொடர் – 2

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: சித்து மூஸ் வாலா கொலையும் வெளிவந்த கேங் வார்களும்… மினி தொடரின் முதல் பாகத்தை படிக்க கீழே க்ளிக்கவும்…!

*************

பஞ்சாப்பில் அரசியல் ரீதியாகவும், எதிரிகள் மூலமாகவும் அச்சுறுத்தல் அதிகரித்ததால் பிரப்ஜிந்தர் சிங் பஞ்சாப்பை காலி செய்து பாதுகாப்பு கருதி உத்தரப்பிரதேசத்தில் தஞ்சம் அடைந்தார். உத்தரப்பிரதேசத்தில் முக்தார் அன்சாரி என்ற கிரிமினலுடன் சேர்ந்து கொண்டு வழக்கம் போல் மிரட்டி பணம் பறித்தல், கூலிக்கு கொலை செய்தல், ஆள் கடத்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தான். கர்நாடகாவில் வைர வியாபாரி ஒருவரை கடத்த திட்டமிட்ட போது கர்நாடகா போலீஸாரால் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டான். பின்னர் டெல்லியிலிருந்து ஹரியானாவுக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அங்கு போலீஸ் காவலில் இருந்து தப்பிவிட்டார். வேறு ஒரு வழக்கில் பல ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்ட சிங் 2004-ம் ஆண்டு பாடியாலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட போது அவனை வரவேற்க 500 கார்கள் சிறைக்கு வந்திருந்தன. ஆனால் 2006-ம் ஆண்டு சண்டிகரில் பிரப்ஜிந்தர் சிங்கின் முன்னாள் கூட்டாளி ராக்கி பாசில்காவின் ஆள்கள் மூலம் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.

பிரப்ஜிந்தர் சிங்

ராக்கியும் ஆரம்பத்தில் பிரப்ஜிந்தர் சிங் கூட்டத்தில்தான் வேலை செய்தான். ஆனால் சிங் கொலை செய்யப்பட்ட பிறகு ராக்கி தனியாக தனது கூட்டத்தை தொடங்கினான். இந்த கூட்டத்தில் ஷேரா குபன், ஜெய்ப்பால், விக்கி கவுண்டர் ஆகியோர் முக்கிய அங்கம் வகித்தனர். அவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் அதிக அளவில் ஈடுபட்டனர்.

அதேசமயம் லாரன்ஸ் பிஸ்னோய் போன்ற ஒரு சில கூட்டத்தினரை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு குற்றங்களையும், அரசியலையும் சேர்த்து செய்தான் ராக்கி.

கருத்து வேறுபாடு காரணமாக ஷேரா குபன், விக்கி ஆகியோர் ஜெய்ப்பால் சிங்குடன் சேர்ந்து கொண்டு தனி சாம்ராஜ்யம் நடத்த ஆரம்பித்தனர். இதனால் ராக்கி அரசியலில் தனது கவனத்தை தீவிரப்படுத்தினான். அதோடு சாராய வியாபாரி சிவ்லால் தோடா, சிரோன்மனி அகாலிதளம் கட்சியுடன் தனது நெருக்கத்தை அதிகரித்துக்கொள்வதில் கவனம் செலுத்தினான். 2012-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அகாலி தளம் சார்பாக போட்டியிட முயன்றான். ஆனால் பாசில்கா தொகுதி பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டதால் ராக்கி சுயேச்சையாக போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தான்.

மற்றொரு புறம் ராக்கியை கொலை செய்ய விக்கியும், ஜெய்ப்பாலும் தகுந்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர். 2012-ம் ஆண்டு ஷேரா குபன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். அவன் இருக்கும் இடம் குறித்து ராக்கிதான் போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கவேண்டும் என்று விக்கியும், ஜெய்ப்பாலும் நினைத்தனர். எனவேதான் 2016-ம் ஆண்டு ராக்கி இமாச்சல பிரதேசத்தில் இருந்து சண்டிகர் சென்று கொண்டிருந்த போது விக்கி, ஜெய்ப்பால் ஆள்கள் வழிமறித்து கொலை செய்தனர். அதோடு கொலை செய்த பிறகு இனி எம்.எல்.ஏ.ஆவாயா என்று பேஸ்புக்கில் விக்கி பதிவிட்டு இருந்தான். ராக்கி இறைபக்தியில் அதிக ஈடுபாடு கொண்டவன். ராக்கியின் அரசியல் பயணத்தை தற்போது அவனது சகோதரி ராஜ்தீப் கவுரி தொடர்ந்து வருகிறார்.

முதல்வர் சுக்பிர் சிங் பாதலுடன் ராக்கி

விக்கி…

ராக்கியை கொலை செய்த விக்கி ஒரு சிறந்த விளையாட்டு வீரர் ஆவார். வட்டு எறிதலில் பல தங்கப்பதக்கங்களை வாங்கி இருக்கிறார். விளையாட்டு வீரராக இருந்த விக்கி எப்படி கிரிமினலாக மாறினான் என்பது ஒரு பெரிய கதையாகும். விக்கியின் உண்மையான பெயர் ஹர்ஜிந்தர் ஆகும். விளையாட்டில் சாதிக்கவேண்டும் என்பதற்காக எப்போதும் மைதானத்திலேயே இருப்பார். அதனால்தான் அவரை அவரது நண்பர்கள் கிரவுண்டர் என்றே அழைத்தனர். அது நாளடைவில் கவுண்டர் என்றாகிவிட்டதாம். ஜலந்தரில் பயிற்சிக்காக சென்ற விக்கி தேசிய அளவில் நடந்த வட்டு எறிதலில் 3 தங்கப்பதக்கம், 2 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அப்படிப்பட்ட விளையாட்டு வீரர் கிரிமினலாகி பஞ்சாப்பில் சிறையை உடைத்துக்கொண்டு 6 பேருடன் வெளியில் வந்தான். அவன் எப்படி வந்தான் என்பது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்…

தொடரும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.