புதுடெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ், பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், முதன்முறையாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஐந்தாவது முறையாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான 12 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் தலைமையில் தேசியக் கல்விக் கொள்கைக்கான பாடத்திட்ட திருத்தம் நடைபெறுகிறது. பாடத்திட்டங்களில் மாற்றம் செய்வதற்காக 25 குழுக்கள் (ஒவ்வொரு குழுவிலும் 7 முதல் 10 பேர் கொண்ட உறுப்பினர்கள் இருப்பர்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களில், குறைந்தது 17 குழுக்களில் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர்கள் உள்ளனர். சுதேசி ஜாக்ரன் மஞ்சின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் முதல் வித்யா பாரதியின் தலைவர் வரை 24 பேர் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கஸ்தூரிரங்கனைத் தொடர்பு கொண்டபோது, ‘தேசிய கல்விக் கொள்கை தொடர்பான எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன்’ என்றார். மேலும் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவரிடம் கேட்ட போது, ‘எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை செய்து வருகிறோம்’ என்றார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் குஜராத் மாநில பாடத்திட்டத்தில் அங்கு நடந்த குஜராத் கலவரம், ஜாதி அமைப்பு, முஸ்லிம் ஆட்சியாளர்கள் தொடர்பான சில அத்தியாயங்கள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.