தெஹ்ரான்,
வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் தினமும் பல கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் வழியாக அரபிக்கடலில் பயணம் மேற்கொள்கிறது. இந்த கப்பல்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்க கடற்படையின் போர் கப்பல்களும் அதேபகுதியில் பயணம் மேற்கொள்கின்றன.
இந்நிலையில், வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு பாரசீக வளைகுடாவின் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல்கள் இன்று வழக்கபாக பயணித்துக்கொண்டிருந்தன. இந்த கப்பல்களுக்கு பாதுகாப்பிற்காக அமெரிக்க போர் கப்பலும் உடன் பயணித்து.
பாரசீக வளைகுடாவின் ஸ்ரிட் ஜலசந்தி பகுதியில் கப்பல்கள் பயணித்தபோது அங்கு வேகமாக வந்த ஈரானிய கடற்படைக்கு சொந்தமான 3 படகுகள் அமெரிக்க போர் கப்பலை இடைமறித்தன.
பின்னர் ஈரான் கடற்படைக்கு சொந்தமான ஒரு படகு அமெரிக்க போர் கப்பலை மோதுவது போல் வேகமாக வந்தது. இதையடுத்து, எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி அமெரிக்க போர் கப்பலில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து அமெரிக்க போர் கப்பலை மோதுவது போல் வந்த ஈரானிய கடற்படை படகு வேகமாக விலகி சென்றது. இந்த சம்பவம் பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.