திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கேரளாவில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. தங்கக்கடத்தலில் முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், சிபிஎம் எம்எல்ஏ, முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொப்னா நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு சொப்னா திடீரென்று ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பது: திருவனந்தபுரம் தங்கக் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருக்கிறது. இதுகுறித்து நான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்ததற்கு பிறகு எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. எனக்கும், எனது வக்கீலுக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் நான் பணிபுரிந்து வரும் பாலக்காட்டில் உள்ள நிறுவனத்திற்கும் கேரள அரசால் பல தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே தங்கக்கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கக்கடத்தல் குறித்து சில முக்கிய விவரங்களை தெரிவிக்கவேண்டி இருப்பதால் நேரில் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.