இஸ்லாமாபாத்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கிராமப்புற சுகாதார மையத்தின் ஊழியர்களின் அலட்சியத்தால், பிறந்த குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி துண்டிக்கப்பட்ட அந்தத் தலை தாயின் வயிற்றிலேயே வைத்துத் தைத்தும் உள்ளனர். இந்த காரணமாக 32 வயது இந்து பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கு காரணமானவர்களைக் கண்டறிய மருத்துவ விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேராசிரியர் ரஹீல் சிக்கந்தர் கூறியதாவது:- தார்பார்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்து பெண் ஒருவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் முதலில் தனது பகுதியில் உள்ள கிராமப்புற சுகாதார மையத்திற்குச் சென்றுள்ளார். அங்குப் பெண் மகப்பேறு மருத்துவர் இல்லாததால், அனுபவமற்ற ஊழியர்கள் அவர்களுக்கு மருத்துவம் பார்த்துள்ளனர்.
அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்துள்ளனர். அதன்படி நடந்த ஆபரேஷனில் சிசுவின் தலை எதிர்பாராத விதமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சிசுவின் தலையை உள்ளேயே வைத்து ஆபரேசனும் செய்துள்ளனர். இதனால் அப்பெண் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் அருகிலுள்ள மிதியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை. இதையடுத்து கடைசியில் அப்பெண் லியாகத் மருத்துவ பல்கலைக்கழகத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.
அங்கு தான் குழந்தையின் மீதமுள்ள உடல் தாயின் வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. அவளுடைய உயிர் காப்பாற்றப்பட்டது. குழந்தையின் தலை உள்ளே சிக்கிக் கொண்டது. தாயின் கருப்பை சிதையும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் வயிற்றுப் பகுதியைத் திறந்து, சிசுவின் தலையை வெளியே எடுக்க வேண்டியதாகி விட்டது” என்று அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரிக்கச் சிந்து சுகாதாரத் துறை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஜுமான் பகோடோ உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சாக்ரோவில் உள்ள ஆரம்பச் சுகாதார மையத்தில் பெண் மருத்துவர்கள் இல்லாதது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கும் போது அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர் இது குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.