மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசைக் கவிழ்க்கும் முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன. சிவசேனாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 10 பேருடன் தலைமறைவாகிவிட்டார் என்ற தகவல் வெளியானது. அவரை பாஜக-வினர் குஜராத்தின் சூரத்தில் மறைத்துவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சிவசேனா கூட்டணி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
அமலாக்கத்துறையின் தொடர் நெருக்கடி காரணமாக சில சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும் சில சிவசேனா எம்.எல்.ஏ-க்களும் சூரத் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து இன்று காலையில் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். “காணாமல்போன எம்.எல்.ஏ-க்கள் திரும்பி வர விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் திரும்பி வர அனுமதிக்கப்படவில்லை. வாய்ப்பு கிடைத்தால் உடனே அவர்கள் திரும்பிவிடுவார்கள். அனைத்து எம்.எல்.ஏ-க்களும் எங்களுடன் வந்துவிடுவார்கள். நான் இதுவரை ஏக்நாத் ஷிண்டேயுடன் பேசவில்லை. அவரிடம் பேசிய பிறகுதான் கருத்து சொல்ல முடியும்.
அவர் இன்னும் சிவசேனாவில்தான் இருக்கிறார். மகாராஷ்டிராவில் மகா விகாஷ் அகாடி அரசில் எந்தவித நிலநடுக்கத்துக்கும் வாய்ப்பு இல்லை. சிவசேனாவில் தன்னை விற்பனை செய்துகொள்ளும் தலைவர் யாரும் இல்லை. மும்பையைக் கட்டுக்குள் கொண்டு வர இது ஒரு சதி. மத்தியப் பிரதேசத்தில் நடந்தது போன்று மகாராஷ்டிராவில் நடக்காது. ஏக்நாத் ஷிண்டே இப்போது மும்பையில் இல்லை. அவரைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் முயற்சி வெற்றி பெறாது. ஷிண்டே சிவசேனாவின் தீவிர ஆதரவாளர். அதிகாரத்துக்கு சிவசேனாவினர் விலை போக மாட்டார்கள். சில எம்.எல்.ஏ-க்களுக்கு எதற்காக அழைத்து வந்தனர் என்றே தெரியாமல் இருக்கிறது. சூரத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பலரிடம் நான் பேசினேன். அவர்கள் வர விரும்புகின்றனர். ஆனால் அவர்களை வரவிடாமல் தடுக்கின்றனர்” என்று தெரிவித்தார்.
அமைச்சர் அப்துல் சத்தார், அமைச்சர் சம்புராஜே தேசாய் உட்பட ஐந்து அமைச்சர்கள் என மொத்தம் 22 எம்.எல்.ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் சூரத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆனந்த் சேனா என்ற புதிய கட்சியை தொடங்குவது குறித்து ஏக்நாத் ஷிண்டே பரிசீலித்துவருவதாகக் கூறப்படுகிறது. தற்போது சூரத்தில் 13 சிவசேனா எம்.எல்.ஏ-க்கள், ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக பாஜக உறுதிபடுத்தியிருக்கிறது.
சரத் பவார் இப்போது டெல்லியில் இருப்பதால் அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், சுனில் தட்காரே ஆகியோர் டெல்லி விரைந்துள்ளனர். இன்று மாலை சரத் பவார் மும்பை திரும்புகிறார். மும்பையில் அவர் உத்தவ் தாக்கரேயுடன் இன்று இரவு ஆலோசனை நடத்தவிருக்கிறார். முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி விரைந்திருக்கிறார். அவர் அமித் ஷாவைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறார்.