மும்பை: மகாராஷ்டிராவில் எம்எல்சி தேர்தலில் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்த சிவசேனா அமைச்சர் மற்றும் 13 எம்எல்ஏக்கள் சூரத் நகருக்கு சென்றுள்ளனர். இதனால் அங்கு ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மகாராஷ்டிர சட்டசபையில் மொத்தம் உள்ள 288 எம்எல்ஏக்களில் பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களும், சிவசேனா 55 பேரும், தேசியவாத காங்கிரஸுக்கு 51 எம்எல்ஏகள் ஆதரவும், காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதர கட்சிகள், சுயேட்சைகள் மொத்தம் 29 பேர் உள்ளனர்.
அண்மையில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் எதிர்கட்சியான பாஜக நிறுத்திய 3 வேட்பாளர்களுமே வெற்றி பெற்றனர். இது சிவசேனாவுக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலா ஓர் இடத்தை வென்றன.
பாஜக சார்பில் களம் கண்ட மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், அனில் பாண்டே மற்றும் தனஞ்சய் மாதிக் ஆகியோர் வெற்றி பெற்றனர். சிவசேனா களமிறக்கிய இருவரில் சஞ்சய் ரவுத் மட்டும் வெற்றி பெற்றார். தனக்கு இருந்த பலத்தை விடவும் பாஜக கூடுதல் இடத்தில் வெற்றி பெற்றது. சிவசேனா எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று அம்மாநில சட்டமேலவைக்கு தேர்தல் நடந்தது. எம்எல்சி தேர்தலில் மொத்தம் 10 இடங்களுக்கு 11 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 2 வேட்பாளர்களையும் பாஜக 5 வேட்பாளர்களையும் நிறுத்தியது. 10 இடங்களுக்கு 11 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
நேற்று மாலை 4 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஒரு எம்எல்சி. வெற்றி பெற மொத்தம் 26 எம்.எல்.ஏக்கள் தேவை. இத்தேர்தலில் சிவசேனா எம்எல்ஏக்கள் 11 பேர் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்தனர்.
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 2 இடங்களிலும் பாஜக 4 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும். ஆனால் நேற்று நடைபெற்ற தேர்தலில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் வென்றது. இத்தேர்தல் முடிவு சிவசேனா கூட்டணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்தநிலையில் சட்டமேலவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 11 சிவசேனா எம்எல்ஏக்கள் மாயமானார்கள். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுமட்டுமின்றி சிவசேனாவை சேர்ந்த மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று நள்ளிரவு வரை கட்சித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இன்று பிற்பகல் 12 மணிக்கு உத்தவ் தாக்கரே மீண்டும் கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்.
தானேவை சேர்ந்த சிவசேனா தலைவரான ஏக்நாத் ஷிண்டே கட்சியில் ஒரங்கட்டப்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கும் ஷிண்டேவுக்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தான் அமைச்சர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சூரத் சென்றுள்ளார்.