புதுடெல்லி: மத்திய அசின் அக்னிபாதை திட்டம் மூலம் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு நாட்டின் பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில், மிக அதிகமான எதிர்ப்பு பிஹாரில் நிலவுகிறது.
போராட்டத்தினால், ரயில் உள்ளிட்ட மத்திய அரசின் பல கோடி சொத்துக்கள் சேத மடைந்துள்ளன. பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவளிக்கும் பாஜகவின் ஆறுக்கும் மேற்பட்ட அலுவலகங்களும், அக்கட்சியின் துணை முதல்வர் குடியிருப்பும் சூறையாடப்பட்டுள்ளன.
பாஜக வின் பல்வேறு தொகுதி எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் போராட்டக் காரர்களால் சூழப்பட்டு தாக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், முக்கிய கூட்டணியான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் விஜேந்திர பிரசாத் யாதவ், போராட்டக் காரர்களை அழைத்து, மத்திய அரசு பேச வேண்டும் எனக் கருத்து கூறியுள்ளார்.
எனினும், அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமார் எந்த கருத்தையும் இதுவரை கூறவில்லை. இதன் காரணமாக, பிஹாரின் பாஜக தலைவர்கள் அதிருப்தியாக உள்ளனர்.
ஏற்கெனவே இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே நிலவும் மோதல் இப்பிரச்சினையால் வலுத்து வருகிறது.
இது குறித்து பிஹார் பாஜகவின் தலைவரான சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறும்போது, ‘அக்னிபாதை போராட்டத்தை அடக்குவதில் மாநில அரசு கண்களை மூடிக் கொண்டு விட்டது.
இத்தனைக்கும் சமூக வலைதளங்களில் கூட எந்த கருத்தையும் கூறாத முதல்வர் நிதிஷ், தனது அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடவில்லை. போராட்டக்காரர் களிடம் அமைதியாகப் போராடுங்கள் என்று கூற கூட முன்வரவில்லை’ என்றார்.
இத்துடன் பாஜக-வின் மதேபுரா அலுவலகம் போராட்டக்காரர் களால் சூறையாடப்படுவதையும், இதை கண்டும், காணாமல் பிஹார் போலீஸார் வேடிக்கைப் பார்க்கும் காட்சிகளின் பதிவையும் செய்தியாளர்களுக்கு திரையிட்டுக் காட்டியுள்ளார் ஜெய்ஸ்வால். இதற்கு முதல்வர் நிதிஷ் தரப்பு உடனடியாக மறுப்பு தெரிவித்
துள்ளது.
பாஜக புகாருக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் நிதிஷின் நெருக்கமானத் தலைவரான ராஜீவ் ரஞ்சன் கூறும்போது, ‘பாஜக தலைவர் ஜெய்ஸ்வால் புத்தி பேதலித்தது போல் பொறுப்பில்லாமல் பேசியுள்ளார். மத்திய அரசின் அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக பிஹாரில் மட்டுமன்றி இதர மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அக்னி பாதை திட்டத்தால் தங்களது எதிர்காலம் அஸ்தமனமாகும் என்ற அச்சம் போராடுபவர்களின் மனதில் எழுந்துள்ளது.
வன்முறையை எந்த அரசும் ஆதரிக்கவில்லை. இளைஞர்களின் அச்சத்தை போக்க முயற்சிக்காமல் எங்கள் அரசு மீது புகார் கூறுகிறார்கள். இவர்களால் பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியாணாவில் ஏன் வன்முறையை தடுக்க முடியவில்லை’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஹாரில் இந்த இரண்டு கட்சிகளின் மோதலை விமர்சிக்கும் வகையில் தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர் கூறும்போது, ‘பிஹார் பற்றி எரிகிறது. இப்பிரச்சினையை தீர்ப்பதை விடுத்து இரண்டு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து மோதிக் கொள்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.