மராட்டியம் 9 பேர் மரணத்திற்கு மூடநம்பிக்கை பின்னணி… அண்டை வீட்டுக்காரர்கள் சந்தேகம்

புனே,

மராட்டியத்தின் சாங்கிலி மாவட்டத்தில் மைசால் என்ற பகுதியில் வீடு ஒன்று உள்ளது. இதில், ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் 9 பேர் வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

சம்பவம் பற்றி சாங்கிலி போலீஸ் சூப்பிரெண்டு தீட்சித் கெடம் கூறும்போது, ஒரு வீட்டில் 9 பேரின் உடல்கள் கிடந்துள்ளன. 3 உடல்கள் ஓரிடத்திலும், 6 உடல்கள் வீட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் கிடந்துள்ளன. இந்த மரணத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

அவர்கள் தற்கொலை செய்திருக்க கூடும் என மற்றொரு காவல் அதிகாரி சந்தேகம் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில் நடந்த தொடர் விசாரணையில், இரண்டு சகோதரர்களின் குடும்பம் உயிரிழந்தது தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் மாணிக் எல்லப்பா. இவர் கால்நடை டாக்டர் ஆவார். இவரது தம்பி போபட் எல்லப்பா பள்ளிக்கூட ஆசிரியர் பணியில் இருந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் கால்நடை டாக்டர் மாணிக் எல்லப்பா, அவரது தாய் அக்தை, மனைவி ரேகா, மகள் பிரதிமா, மகன் ஆதித்யா, மருமகன் சுபம் எனவும், மற்றொரு வீட்டில் இறந்து கிடந்தவர்கள் ஆசிரியர் போபட், அவரது மனைவி அர்ச்சனா, மகள் சங்கீத் எனவும் தெரியவந்துள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 9 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரியவந்தது. இருப்பினும் அவர்களது வீடுகளில் இருந்து தற்கொலை கடிதம் எதுவும் சிக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரம் தெரிய வரும் என கூறப்படுகிறது. அந்த குடும்பத்தினர் கடன் தொல்லையால் இந்த முடிவை எடுத்து இருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் 9 பேரை தற்கொலைக்கு தூண்டியுள்ளனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், இதுபற்றி அண்டை வீட்டுக்காரர் ஒருவர் கூறும்போது, அந்த குடும்பத்தினர் நன்கு படித்தவர்கள். என்றபோதும் மூடநம்பிக்கை செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டனர். ஆன்மீக நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டினர்.

சமீபத்தில் கூட அவர்களது மகன் சுபம் பல தேங்காய்களை வாங்கி வந்துள்ளார். அது சந்தேகம் ஏற்படுத்தியது. அதனை பற்றி கேட்டதற்கு, எங்களுடைய அனைத்து பிரச்னைகளும் இனி தீர போகிறது என்று கூறினார் என்று தெரிவித்து உள்ளார்.

அந்த குடும்பத்தினர், யார் மீதும் பொறாமைப்படவோ, யாருடனும் மோதல் போக்கோ கொண்டிருக்கவில்லை. அவர்கள் நண்பர்களாக, அனைவருடனும் மகிழ்ச்சியாகவே பழகி வந்தனர் என அக்கம் பக்கத்தில் வசிப்போர் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி அருகே வசிக்கும் பாஷா என்பவர் கூறும்போது, அவர்கள் என்னுடனும் மற்றும் எல்லோருடனும் நல்ல முறையிலேயே பழகினார்கள். கடந்த 2 முதல் 3 மாதங்களாக அவர்கள் எந்த காரணத்திற்காகவும், மனஅழுத்தத்துடன் இருந்து நான் பார்த்தது இல்லை. இரவு வரை அவர்கள் வழக்கம்போல் பணிகளை செய்து வந்தனர்.

அவர்களது தற்கொலைக்கான காரணம் பற்றி எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு கடன் இருந்தது என எனக்கு தெரியும். ஆனால், தற்கொலைக்கு இது ஒரு காரணம் ஆக இருக்க கூடும் என நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே சரியான காரணம் தெரியவரும். இதனால், ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் 9 பேரின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் தெரியாமலேயே உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.