மராட்டிய அரசியலில் சூடு பிடித்த கட்சி மாறி ஓட்டளித்த விவகாரம்; ஷிண்டேவை நீக்க கடிதம்

புனே,

மராட்டிய மேல்சபைக்கான தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கட்சி மாறி ஓட்டு போட்டது இதற்கு காரணம் என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து, சிவசேனா தலைவர்களில் ஒருவரான மற்றும் மராட்டிய அமைச்சரவையில் மந்திரியாக உள்ள ஏக்நாத் ஷிண்டேவை கட்சியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடன் சேர்ந்து 26 எம்.எல்.ஏ.க்களும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என மராட்டிய அரசியல் வட்டாரம் கூறுகிறது.

அவர்கள் குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்று விட்டனர் என கூறப்படுகிறது. இதேபோன்று, 15 சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தும் கூறினார். இது மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதுபற்றி சஞ்சய் ராவத் கூறும்போது, மகா விகாஸ் அகாடி அரசை கவிழ்க்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து மராட்டியம் மிக வேறுபட்டது என்று பா.ஜ.க. நினைவில் கொள்ள வேண்டும்.

ஏக்நாத் ஷிண்டே ஜியை எனக்கு நன்கு தெரியும். அவர் ஓர் உண்மையான சிவசேனா சேவகர். எந்த நிபந்தனையும் இன்றி அவர் திரும்பவும் வருவார். குஜராத்தின் சூரத் நகரில் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என நான் கேள்விப்பட்டேன். அவர்கள் நிச்சயம் திரும்பி வருவார்கள்.

நாம் அனைவரும் சிவசேனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என கூறியுள்ளார். அவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைத்தும் நன்றாக முடியும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

இந்நிலையில், மராட்டிய சட்டசபை கட்சி தலைவர் பதவியில் இருந்து ஷிண்டே நீக்கப்பட்டார். இந்நிலையில் டுவிட்டரில், இதற்கு முன் ஒருபோதும், இனியும் அதிகாரத்திற்காக பாலாசாகேப்பின் போதனைகளை நான் ஏமாற்றமாட்டேன் என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார். சிவசேனாவின் உறுதியான சேவகர்கள் நாங்கள். சிவசேனாவை நிறுவிய பாலாசாகேப் இந்துத்துவாவை எங்களுக்கு கற்று தந்தவர் என்றும் அதில் அவர் தெரிவித்து உள்ளார்.

எனினும், இந்த விவகாரம் சூடு பிடித்து உள்ளது. இதனை தொடர்ந்து, மராட்டிய சட்டசபை துணை சபாநாயகர் நர்ஹாரி ஜிர்வாலை சிவசேனா தலைவர்கள் இன்று நேரில் சந்தித்தனர்.

அவர்கள், மராட்டிய சட்டசபை கட்சி தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் ஒன்றை அவரிடம் வழங்கினர். ஷிண்டேவுக்கு பதிலாக அஜய் சவுத்ரியை அந்த பதவியில் நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.