மராட்டிய அரசை கவிழ்க்க 3-வது முறை முயற்சி; நிலைமையை உத்தவ் தாக்கரே கையாளுவார் – சரத் பவார்

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநில மந்திரியுமான எக்நாத் ஷிண்டே திடீரென குஜராத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தன்னுடன் சிவசேனா மற்றும் சுயேட்சைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மராட்டியத்தில் சிவசேனா கட்சிக்கும், மராட்டிய அரசுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் ஆட்சி கவிழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார். ஜனதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் தொடர்பான ஆலோசனைக்காக டெல்ல்லிக்கு சென்றுள்ள சரத் பவார் மராட்டிய அரசியலில் நிலவி வரும் குழப்பம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில், மராட்டியத்தில் மகாவிகாஸ் அகாடி அரசை கவிழ்க்க 3-வது முறையாக முயற்சி நடைபெறுகிறது. இந்த நிலைமையை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கையாளுவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கூட்டணியில் மாற்றமில்லை. உத்தவ் தாக்கரே தலைமை மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது.

இது சிவசேனாவின் உள்கட்சி விவகாரம். நிலைமையை ஆராய்ந்த பின்னர் இந்த விவகாரம் குறித்து அவர்கள் எங்களுக்கு தெரிவிப்பார்கள்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கும். மராட்டிய அரசு கவிழாது. மகாவிகாஸ் அகாடி 5 ஆண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.