கராச்சி:பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில், அனுபவம் இல்லாத டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் செய்த பிரசவத்தின்போது, தாயின் வயிற்றில் இருந்த சிசு, கழுத்து துண்டாகி உயிரிழந்தது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தார்பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த, இளம் ஹிந்து பெண், பிரசவ வலி ஏற்பட்டதால், அங்கிருந்த கிராம மருத்துவ மையத்துக்கு சென்றுள்ளார்.மகப்பேறு மருத்துவர் இல்லாத நிலையில் அங்கிருந்த வேறு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், பிரசவம் பார்த்துள்ளனர்.
போதிய அனுபவம் இல்லாத ஊழியர்கள், பிரசவத்தின்போது, தாயின் வயிற்றில் இருந்த குழந்தையின் தலையை வெளியே எடுக்கப் பார்த்துள்ளனர்.ஆனால் தலை துண்டானது. உடனே, தலையை தாயின் கர்ப்பப் பைக்குள் திணித்துள்ளனர்.உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த தாய் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
ஆனால், அங்கு பிரசவம் பார்க்க வசதியில்லை என்பதால், சற்று தொலைவில் உள்ள லியாகத் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு, அந்த தாயின் வயிற்றில் இருந்த குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் மூலம், குழந்தையின் தலையும் வெளியே எடுக்கப்பட்டது.
இதையடுத்து, மரணத்தின் விளிம்புக்கு சென்ற அந்த தாய் மீட்கப்பட்டார்.இதற்கிடையே, சிசுவின் உயிரிழப்புக்கு காரணமான இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு சிந்து மாகாண அரசு உத்தரவிட்டுஉள்ளது.
Advertisement