சென்னை: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் தகுதியான மாணவிகளின் விவரங்களை சமர்ப்பிக்க கல்லூரிகளுக்கு உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஜூலை 15-ம் தேதி அமல்
இந்த திட்டம் ஜூலை 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிகளில் தற்போது உயர்கல்வியை தொடரும் மாணவிகளின் விவரங்கள் அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாணவிகளின் கல்லூரி அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் கார்டு மற்றும் 12, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றை சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, உரிய சான்றிதழ்கள் கிடைக்கப் பெற்றவுடன், அவற்றை சரிபார்த்து சமூகநலத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.