மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது இல்லத்தில் செவ்வாய்கிழமை சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியபோது அதில் 20க்கும் குறைவான சட்டமன்ற உறுப்பினர்களே கலந்து கொண்டார்கள் என்கிற அதிர்ச்சி தகவலால் மும்பை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவசேனா கட்சிக்கு 55 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், கட்சி தலைமைக்கு பாதி உறுப்பினர்களின் ஆதரவுகூட இல்லாத நிலையில், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நிலைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சிவசேனா கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் குஜராத் மாநிலத்தில் முகாமிட்டுள்ளதால், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசும் கலக்கம் அடைந்துள்ளன. உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்படும் மகாராஷ்டிரா அரசு கவிழ்ந்து விடுமோ என்கிற அச்சத்தால், தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தக்கவைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முயற்சி எடுத்தது வருகின்றன.
அதிருப்தி சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலைமை தாங்கும் ஏக்நாத் ஷிண்டே தங்கள் கட்சி உறுப்பினர்களையும் ஈர்க்கக்கூடும் என அந்த காட்சிகள் அச்சம் அடைந்துள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டமன்றஉறுப்பினர்களை தக்கவைக்கும் பணி துணை முதல்வர் அஜித் பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி முன்னாள் மத்திய பிரதேச முதல்வார் கமல் நாத்தை மும்பை அனுப்பியுள்ளது.
டெல்லியில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அவசரமாக மும்பை விரைந்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதே சமயத்தில் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்ணவிஸ் டெல்லி விரைந்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் முகாமிட்டுள்ள அதிருப்தி சிவ சேனா சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என உன்னிப்பாக கவனிக்க படுகிறது. பாஜக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தி அரசை கவிழ்க்குமா, அத்துடன் பாஜக கூட்டணி அரசு அமைக்க வாய்ப்பு அமையுமா என பல்வேறு ஆலோசனைகள் நடைபெறுகின்றன.
சூரத் நகரில் அதிருப்தி சிவ சேனா சட்டமன்ற உறுப்பினர்களுடன் தங்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே சூசகமாக முதல்வர் உத்தவ் தாக்கரேயை விமர்சித்துள்ளார். சிவ சேனா நிறுவனர் பால் தாக்கரேயின் ஹிந்துத்வா கொள்கைகளை பின்பற்றுவதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன் என அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். பதவிக்காக ஹிந்துவா கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என உத்தவ் தாக்கரே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து முதல்வரானதை விமர்சித்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே. பாரதிய ஜனதா கட்சியுடன் மீண்டும் சிவ சேனா கூட்டணி அமைக்க வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே வற்புறுத்தி வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவ சேனா சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் பதவியிலிருந்து ஏக்நாத் ஷிண்டேயை நீக்க உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுத்துள்ளார். அதே சமயத்தில் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க தயார் எனவும் சமாதான முயற்சியில் தாக்கரே தெரிவித்துள்ளார். சிவ சேனா கட்சியின் மூத்த தலைவர்கள் மிலிண்ட் நார்வேக்கர் மற்றும் ரவி பாதக் ஆகியோர் சூரத்துக்கு ஏக்நாத் ஷிண்டேயுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளனர்.
– கணபதி சுப்ரமணியம்
இதையும் படிக்கலாம்: நோ பார்க்கிங்கில் வாகனமா? – உடனே போட்டோ எடுத்து அனுப்புங்க.. புதிய அறிவிப்பு சொல்வதென்ன?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM