சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாலத்தீவின் தலைநகரான மாலேவில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் இந்திய கலாசார மையம் சார்பில் மாலத்தீவு அரசின் ஏற்பாட்டில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில், யோகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் மைதானத்துக்குள் நுழைந்து திடீரென வன்முறையில் ஈடுபட்டது. அந்தக் கும்பல், `யோகா இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது!’ என்ற பதாகைகளை ஏந்தியிருத்தது. மேலும், யோகா பயிற்சி செய்துகொண்டிருந்தவர்களை அந்தக் கும்பல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் யோகா செய்வது சூரியனை வழிபடுவதைப் போன்றது என்று நம்புவதால் அவர்கள் யோகா கலைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. மைதானத்தைவிட்டு வெளியேற வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் மாலத்தீவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்த மாலித்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சொலிக் உத்தரவிட்டிருக்கிறார்.