புதுச்சேரி: “நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை தொடங்குகிறோம்” என்று புதுச்சேரி எம்.பி தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
புதுச்சேரி உட்பட 144 எம்.பி தொகுதிகளில் தேர்தல் பணிகளை பாஜக தொடங்குகிறது. இவை அனைத்தும் தென்னிந்தியாவில் உள்ளன. புதுவையில் நடந்த யோகா விழாவில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் கட்சியை வலுப்படுத்த உள்ளோம். கட்சியைப் பலப்படுத்துவதே இலக்கு. போட்டி தொடர்பான விஷயங்கள் தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்போம். தற்போது அடிப்படை பணிகளை தொடங்கியுள்ளோம்.
வரும் ஜூலை 7, 8, 9ம் தேதிகளில் புதுவையில் 21 நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கிறேன். பிரதமர் மோடி தலைமையிலான 8 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற சேவை திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என பிரதமர் உறுதியளித்துள்ளார். அதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்.
புதுச்சேரி ஜிப்மரில் மாத்திரை இல்லாதது உட்பட பல விஷயங்கள் தொடர்பாக பேரவைத்தலைவர், அமைச்சர் ஆகியோர் மத்திய அமைச்சரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது பற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் விசாரிக்கிறார். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவில் ஒற்றைத் தலைமை உட்கட்சி விவகாரமாகும். புதுச்சேரி உட்பட நாடு முழுக்க 10 லட்சம் வேலைவாய்ப்பு தர பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களில் வெல்வோம். ஆட்சி வந்து ஓராண்டுதான் ஆகிறது. ரேஷன் கடைகள் திறப்பு உள்ளிட்ட விஷயங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறுகையில், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பணிகளை தென்னிந்தியாவில் புதுச்சேரி உட்பட 144 தொகுதிகளில் தொடங்கி கட்சியைப் பலப்படுத்த கட்சித் தலைமை முடிவு எடுத்துள்ளது. அதன்படி புதுச்சேரி நாடாளுமன்ற பொறுப்பாளராக மத்திய அமைச்சர் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இனி மாதம் ஒரு முறை புதுச்சேரி வந்து பணிகளை மேற்கொள்வார். தமிழ் தெரிந்த தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளனர். அடுத்த மாதம் தேர்தல் பணிகளை தொடங்குகிறார்” என்று குறிப்பிட்டார். பேட்டியின்போது எம்.பி செல்வகணபதி, அமைச்சர் சாய்சரவணக்குமார், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், வெங்கடேசன், ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.