சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூரணி தேவி தலைமையில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
எட்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் யோகா நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூரணி தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்து சூரிய நமஸ்காரம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு யோகா செய்வதன் நன்மை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அரை மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு வகையான ஆசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர் அன்னபூரணி தேவி, பிரதமரின் முயற்சியால் எட்டாவது யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது என்றார்.
யோகா செய்வதன் மூலம் அவரவர் மனதையும் உடலையும் நன்கு வைத்துக் கொள்ள முடியும் என்றார் அவர்.உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் யோகா செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி: எஸ்.இர்ஷாத் அஹமது