எட்டாவது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 75 நகரங்களில் மாபெரும் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் மைசூர் அரண்மனைக்கு அருகில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய பிரதமர், “இந்த 8-வது சர்வதேச யோகா தினத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று அனைத்து பகுதிகளிலும் யோகா பயிற்சி செய்யப்படுகிறது. யோகா நமக்கு அமைதியைத் தருகிறது, யோகாவிலிருந்து வரும் அமைதி தனிநபர்களுக்கு மட்டுமல்ல, நமது நாடுகளுக்கும் உலகிற்கும் அமைதியைக் கொண்டுவருகிறது. யோகா எந்தவொரு தனிநபருக்கும் மட்டுமல்ல, முழு மனிதக்குலத்திற்கும் பொருந்தும். இதனால்தான் சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் ‘ யோகா மனிதக்குலத்திற்கானது’ என்று பெயரிடப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஷ்டிரபதி பவனில் நடந்த யோகா தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “யோகா என்பது மனிதக்குலத்திற்கு இந்தியா அளித்த பரிசு, இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறை, மனம், உடல் மற்றும் ஆன்மாவைச் சமநிலைப்படுத்துகிறது. ஒவ்வொருவரும் யோகாவை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றி அதன் பலனை அனுபவிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.