ராகுல் காந்தியிடம் 40 மணி நேரம் விசாரணை நடத்த வேண்டியதின் அவசியம் என்ன?டி.கே.சிவக்குமார் கேள்வி

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு விசாரணை நடத்துகிறது. காங்கிரசார் அமைதி வழியில் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அரசியலில் மாற்றங்கள் ஏற்படும். இதை பா.ஜனதாவினர் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கட்சி தலைவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். கடினமான நேரத்தில் அவர்களுக்கு தைரியம் கூற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் டெல்லி வந்துள்ளேன். எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களை டெல்லி வரும்படி உத்தரவிட்டுள்ளோம்.

ராகுல் காந்தியிடம் 40 மணி நேரம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன?. இதில் சதித்திட்டம் அடங்கியுள்ளது. எல்லாவற்றையும் எதிர்கொள்ள ராகுல் காந்தி தயாராக உள்ளார். சோனியா காந்தி வருகிற 23-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. விசாரணையை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்.

அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தை அவமதிக்கிறார்கள். நேஷன் ஹெரால்டு பத்திரிகை சுதந்திர போராட்டத்திற்காக தொடங்கப்பட்டது. அது காங்கிரஸ் தொடர்புடைய விஷயம். அதில் ஒரு ரூபாய் கூட முறைகேடு நடக்கவில்லை. ராகுல் காந்தியின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா இவ்வாறு செயல்படுகிறது. சிவசேனாவை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் சூரத்தில் தங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதுபற்றி எனக்கு அதிகம் தெரியாது.இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.