ருவாண்டாவின் கிகாலியில் 2022 ஜூன் 21 முதல் 25 வரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
ருவாண்டாவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பொதுநலவாயத்தின் ஐம்பத்து நான்கு (54) உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளும்.
அதி மாண்புமிகு ராணி எலிசபெத் II ஐப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ள மாண்புமிகு வேல்ஸ் இளவரசரின் முன்னிலையில், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஜூன் 24ஆந் திகதி ருவாண்டாவின் ஜனாதிபதி பால் ககாமே அவர்களால் திறக்கப்படும். அதனைத் தொடர்ந்து 2022 ஜூன் 24 – 25ஆந் திகதிகளில் பொதுநலவாய அரச தலைவர்களின் உயர்மட்டக் கூட்டங்கள் நடைபெறுவதுடன், ஜூன் 23ஆந் திகதி பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறும்.
2022 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் கருப்பொருளானது, ‘பொதுவான எதிர்காலத்தை வழங்குதல்: இணைத்தல், புதுமைப்படுத்துதல் மற்றும் மாற்றுதல்’ எனும் தலைப்பில், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் வர்த்தகத்தை அதிகரித்தல் போன்ற பகிரப்பட்ட இலக்குகளை அடைவதில் பொதுநலவாய குடும்பத்தின் பணியை எடுத்துக்காட்டுகின்றது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், ‘ஜனநாயகம், சமாதானம் மற்றும் ஆளுகை’, ‘நிலையான மற்றும் உள்ளடக்கிய அபிவிருத்தி’ மற்றும் ‘கோவிட்-19க்குப் பிந்தைய மீட்பு’ ஆகிய மூன்று கருப்பொருள் பகுதிகளின் கீழ் உயர்மட்டக் கலந்துரையாடல்களில் பங்கேற்பார்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பக்க அம்சமாக, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பல பொதுநலவாய உறுப்பு நாடுகளுடன் வெளியுறவு அமைச்சர் மட்டத்திலான இருதரப்பு சந்திப்புக்களில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுநலவாய அமைப்பின் எட்டு ஸ்தாபக உறுப்பினர்களில் இலங்கையும் ஒன்றாவதுடன், 23வது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை நவம்பர் 2013 இல் கொழும்பில் நடாத்தியது. ருவாண்டாவில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஜூன் 2020 இல் நடைபெறவிருந்தது, எனினும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஜூன் 21