ஆஸ்கர் என்றால் எளிய இந்திய பிரஜைகளுக்கு முதலில் ரஹ்மான்தான் நினைவுக்கு வருவார். ஆனால், என்னைப் போன்ற சில தீவிரமான விஜய் ரசிகர்களுக்கு ஜில்லா படமும் ‘கண்டாங்கி…கண்டாங்கி’ பாடலும்தான் நினைவுக்கு வரும். காரணம், ஒரு வார இதழ் கொடுத்த ஷாக்.
அது 2014. அஜித்தின் வீரமும் விஜய்யின் ஜில்லாவும் ஒரே நாளில் மோத தயாராகிக்கொண்டிருக்கிறது. அப்போது 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சாதாரண சமயங்களிலேயே வகுப்பில் அஜித் Vs விஜய் ரசிகர்கள் சண்டை உக்கிரமாக இருக்கும். (எல்லாம் வாய் சண்டைதான். எங்களுக்குள்ள அதெல்லாம் ஒரு எண்டெர்டெயின்மெண்ட்ட்ட்ட்ட்டு) ஜில்லா Vs வீரம் என்றவுடன் அந்த சண்டையெல்லாம் கூடுதல் டோஸோடு ஹெவியாக நடந்துக்கொண்டிருந்தது. தினமும் போர்க்களத்துக்கு செல்வது போலவே இருக்கும். அஜித்தை அட்டாக் செய்து விஜய்யின் பெருமையை பேசவும் விஜய்யை அட்டாக் செய்து அஜித்தின் பெருமையை பேசவும் ஹோம் ஒர்க் செய்து பாயிண்ட்டுகளோடு செல்வோம்.
’25 ஏக்கர் சோளக்காட்டில் ஜில்லாவின் க்ளைமாக்ஸ் சண்டை’ என தந்தியில் ஒரு ஓரமாக வெளியாகும் நாலு வரி செய்தியை வைத்து கூட ஒரு நாள் முழுக்க பில்டப் கொடுப்போம். அஜித் ட்ரெயினில் தொங்கிக்கொண்டே சண்டை செய்ததை வைத்து எதிர்தரப்பு அவர்களின் புகழ்பாடும். நியுஸ் பேப்பர்கள், வார பத்திரிகைகளில் வரும் செய்திகள்தான் எங்களுடைய விவாதங்களின் சண்டைகளின் கேளிக்கைகளின் அடிநாதமாக இருக்கும். அதனாலயே தேடித்தேடி விஜய், அஜித் செய்திகளை படிப்போம்.
ஒருநாள் பள்ளிக்கு வேகவேகமாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ஒரு பெட்டி கடையில் ஒரு வார இதழின் விளம்பர போஸ்டர் தொங்கவிடப்பட்டிருந்தது. அதில், ஜில்லா படத்தின் விஜய் ஸ்டில் ஒன்றை போட்டு ‘ஆஸ்கர் இடத்தில் விஜய்’ என தலைப்பு. எனக்கோ ஜிவ்வென்று சிலுசிலுத்து மயிர்கூச்செறிந்துவிட்டது. விஜய்க்கு ஆஸ்கர்! இதைவிட பேரானந்தம் வேறென்ன இருக்க முடியும்? அந்த பத்திரிகையை வாங்கும் அளவுக்கு துட்டு எதுவும் கையில் இல்லாததால், மாலையில் வாங்கிக்கொள்ளலாம் என பள்ளிக்கு சைக்கிளை ஒரு மிதி மிதித்துவிட்டேன்.
‘பாய்சன் கிடைச்சாலே பாயாசம் மாதிரி குடிப்போம்…பாயாசமே கிடைச்சா?’ விஜய்க்கு ஆஸ்கர்…ஜில்லாவுக்கு ஆஸ்கர் என அன்றைக்கு சுழற்றிய கம்பில் எதிர்முகாம் அத்தனையும் கப்சிப். ஆஸ்கர்னு ஒரே போடாக போட்ட பிறகு என்னத்த பேச முடியும்? ப்ரூஃப் கேட்ட விநாயகம் ப்ரதர்ஸிடம் ‘இருங்கல நாளைக்கு குமுதத்த தூக்கிட்டு வந்து மூஞ்சில வீசுதேன்’ என சவால் விட்டுவிட்டு, சாயங்காலமாக வீட்டுக்கு வந்து எப்படியோ 15-20 ரூபாய் தேற்றி அதே பெட்டி கடையில் சென்று அந்த விளம்பரத்தை பார்த்துக் கொண்டே அந்த பத்திரிகையை வாங்கினேன்.
அட்டையிலும் அதே விஜய் ஸ்டில். அதே ‘ஆஸ்கர் இடத்தில் விஜய்’ தலைப்பு. அய்யோ பக்கங்களை புரட்டி அந்த செய்திக்கட்டுரையை படிப்பதற்குள் ஏற்பட்ட பூரிப்பு இருக்கிறதே. அதெல்லாம் சொன்னால் தெரியாது. ஆனால், இரண்டே நிமிடங்களில் அந்த பூரிப்பெல்லாம் நமத்துப்போனது. அந்த செய்தியை படித்து முடித்துவிட்டேன். அதன் சாராம்சம் இதுதான். ஜில்லா படத்தின் ‘கண்டாங்கி கண்டாங்கி’ பாடலை ஜப்பானில் எதோ ஒரு கலர் கலரான இடத்தில் வைத்து எடுத்திருக்கிறார்கள். அந்த லொகேஷனில் அதற்கு முன் எதோ ஒரு வெளிநாட்டு படம் எடுக்கப்பட்டு அந்த படம் ஆஸ்கர் விருதிற்கு நாமினேட் ஆகியிருக்கிறது அதுதான் செய்தி. நான்கு விஜய் படங்களை போட்டு அதற்கு ‘ஆஸ்கர் இடத்தில் விஜய்’ என தலைப்பிட்டு கவர்ஸ்டோரி ஆக்கியிருந்தார்கள்.
‘கேக்குறவன் கேனப்பயலா இருந்தா கேரம் போர்ட கண்டுபிடிச்சது கே.எஸ்.ரவிக்குமார்னு சொல்லுவானுவ போல’ அந்த கதைதான். மறுநாள் வீரம் கேங் என்ன செய்ததென்றால், அதெப்படி என் வாயால சொல்லுவேன். ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல. ப்ளீஸ் அடுத்த கதைக்கு போயீருங்க!
நெல்லை சம்பவம்:
திருநெல்வேலியின் சினிமா ரசிகர்களுக்கு ராம் சினிமாஸ் ஒரு மறக்க முடியாத திரையரங்கம். வானுயர்ந்த கட் அவுட்களுடன் அந்த திரையரங்கின் பிரத்யேக கொண்டாட்டங்களுடன் ஆஸ்தான நடிகரின் படத்தை காண வெளிமாநிலங்களிலிருந்து இருந்தெல்லாம் வரும் ரசிகர்களை பார்க்க ஆச்சர்யமாக இருக்கும். பெரும்பாலான விஜய் படங்களின் முதல்நாள் காட்சியை ராம் சினிமாஸில்தான் பார்த்திருக்கிறேன். அந்த திரையரங்கின் உள்ளே நுழையும்போதே ஷோகேஸில் பல படங்களின் வெற்றிக்காக வழங்கப்பட்ட கேடயங்களைப் பார்க்கும்போது இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாகும். காரணம், அதில் விஜய் படங்களின் வெற்றிக்காக வழங்கப்பட்ட கேடயங்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். வெற்றி கேடயங்கள் என்றவுடன்தான் இன்னொரு சம்பவமும் நினைவிற்கு வருகிறது.
2014 தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத தீபாவளியாக அமைந்தது. துப்பாக்கிக்கு பிறகு விஜய்யும் ஏ.ஆர்.முருகதாஸூம் இணைந்த கத்தி திரைப்படம் அந்த தீபாவளி நாளில்தான் வெளியாகியிருந்தது. தடைகளை தாண்டி வெளியான அந்த படம் விஜய்யின் கரியரில் மிகமுக்கிய படமாக மாறிப்போனது. மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் தமிழகத்தில் ஒரு சில ஊர்களுக்கு விஜய்யே நேரடியாக வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். விஜய் விஜயம் செய்த அந்த ஒன்றிரண்டு ஊர்களில் திருநெல்வேலியும் ஒன்று. அப்போது நான் 11 ஆம் வகுப்பு. வீட்டில் டியூசனுக்கு செல்கிறேன் என லடாய்த்துவிட்டு விஜய்யை பார்க்க சென்றுவிட்டேன். நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்திருந்த மைதானம் நிரம்பி வழிந்தது.
கிட்டத்தட்ட அந்த நிகழ்வு ஒரு அரசியல் கட்சி மாநாட்டை போல நடந்திருந்தது. அதனால்தான் என்னவோ விஜய்யும் சொன்ன நேரத்தை தாண்டி அரசியல் கட்சி தலைவர்களை போலவே கொஞ்சம் தாமதமாகத்தான் வந்திருந்தார். விஜய் மதியம் 1 மணிக்கு வருவதாகத்தான் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் அந்த மைதானத்திற்கு வந்து சேர்ந்த போது மணி 5 ஆகியிருந்தது. கூட்டம் களையவே இல்லை. 10 மணியிலிருந்து வரத்தொடங்கிய கூட்டம் அப்படியே நின்று காத்திருந்து காத்திருந்து விஜய் பேசி முடித்து நிகழ்வுகளெல்லாம் முழுமையாக முடிந்து அவரை வழியனுப்பிவிட்ட பிறகுதான் களைந்தது. கூட்டத்தில் ஒருவனாக எம்பி எம்பி துள்ளிக்குதித்து தொலைவிலிருந்து ஒரு புள்ளியளவே தெரிந்த விஜய்யின் முகத்தை பார்த்து பூரித்த தருணங்களை மறக்கவே முடியாது.
குழந்தைப்பருவம் தொடங்கி பால்யம் வரையிலான நினைவுகளில் சேகரமாகியிருக்கும் பல சுவாரஸ்யங்களும் வேடிக்கைகளும் விஜய்யின் பெயராலயே அரங்கேறியிருக்கிறது. அவரைத் தவிர்த்துவிட்டு என்னுடைய இந்தப் பருவங்களைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்வது பெரும் சிரமமாகவே இருக்கும். மேலே குறிப்பிட்டவற்றை சம்பவங்களை போன்று இன்னும் நிறையவே இருக்கிறது. அத்தனை சுவாரஸ்யங்களுக்கும் அத்தனை வேடிக்கைகளுக்கும் காரணமாக இருந்த விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
Happy Birthday Thalapathy Vijay!
நியாயமாக இந்தக் கட்டுரை இத்தோடு முடித்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால், அப்படி முடித்தால் இது விஜய்யின் புகழ்பாடுவதற்காக ரசிக வெறியை பெருமிதத்தோடு கூறி அதை ஊக்குவிப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரையாக மட்டுமே சுருங்கிவிடும். அப்படியிருப்பதில் உடன்பாடில்லை என்பதால் இன்னும் சில வரிகள்.
கல்லூரியில் கேக் வெட்டிய அந்த சம்பவம் நடந்து முழுமையாக ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இப்போது எனக்கு இருக்கும் மனப்பக்குவத்திலிருந்து அந்த கேக் வெட்டிய சம்பவத்தை எண்ணிப் பார்த்தால் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கிறது. கல்லூரி வளாகத்தில் ஒரு நடிகருக்காக கூச்சலிட்டு கும்மாளம் அடித்தது பெரும் தவறாகவே தோன்றுகிறது. இன்றைய தேதிக்கு விஜய் ஒரு மணிக்கு வருவதாக கூறிவிட்டு 5 மணிக்கு வந்தாரெனில் அந்த கூட்டத்தில் அந்த மண்டையை பிளக்கும் 102 டிகிரி வெயிலில் நின்றிருக்கவே மாட்டேன்.
அப்டேட் ஆகியிராத என்னுடைய முந்தைய வெர்ஷனின் அபத்தங்கள் அவை. அதற்காக இப்போது விஜய்யை பிடிக்காது. விஜய் படங்களை ரசிக்கமாட்டேன் என புரிந்துகொள்ள வேண்டியதில்லை. இப்போதும் அவரையும் அவரின் படங்களையும் முழுமையாக ரசிக்கிறேன். இப்போதும் விஜய் படங்கள் ரிலீசாவதற்கு முந்தைய நாள் இரவு படத்தை பற்றிய எதிர்பார்ப்பில் தூக்கம் தொலைக்கிறேன். ஆனால், ஒரு வித மனமுதிர்ச்சியோடு அதை அணுகுகிறேன்.
KGF ம் Beast ம் ஒன்றாக இறங்கி ராக்கி பாய் வென்றால் மனம் அதை ஏற்றுக்கொள்கிறது. வயிற்றெரிச்சல் இல்லாமல் அஜித் படங்களையும் ரசிக்க முடிகிறது. யார் மீதும் வன்மத்தை கக்கும் அளவுக்கு மீம் போட்டு கலாய்க்க விருப்பமில்லை. ஆக, ரசிகர்களே ரசனையை தாண்டிய ரசிக வெறி என்பது ஒரு தற்காலிக நோய். ஏறும் வயதும் கூடும் மனப்பக்குவமும் மட்டுமே அதற்கான தீர்வு. இதை உணர்ந்தால் அஜித் ரசிகர்களுமே கூட இணைந்து #HappyBirthdayVijay என ஒரு ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்யலாம். அதே பக்குவத்தோடு விஜய் ரசிகர்களும் #HappyBirthdayAK என மே 1 ஆம் தேதி பதில் மரியாதை செய்யலாம்.
செய்வீர்களா????
-உ.ஸ்ரீராம்