இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் தற்கொலையில் உயிரிழந்திருப்பார்கள் என யூகிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத் வன்மோர் மற்றும் மானிக் வன்மோர்.
இவர்கள் தங்கள் தாயார், மனைவி, நான்கு குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகின்றனர். இதில் போபத் வன்மோர் ஆசிரியராகவும், மானிக் வன்மோர் கால்நடை மருத்துவராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும் நேற்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உயிரிழப்புக்கு விஷம் அருந்தியது காரணமாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இரு சகோதரர்களும் கடும் கடன் சுமையில் சிக்கித் தவித்து வந்ததால் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடல்களை கைப்பற்றப்பட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் என்ன எழுதியிருந்தது என்பது குறித்த விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
அதிகளவில் கடனை வாங்கிவிட்டு திருப்பி தர முடியாமல் குடும்பத்தார் திணறி வந்துள்ளனர்.
அதே நேரத்தில் ஆன்மீக தாக்கம் அல்லது எதாவது மூடநம்பிக்கை காரணமாக இந்த முடிவை எடுத்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2018ல் டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மோட்சம் கிடைக்கும், மீண்டும் பூமியில் உயிர்பெறலாம் என்ற மூடநம்பிக்கையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.