12ஆம் வகுப்பு தேர்வில் 96.55 சதவீதம் சிறைவாசிகளும், 10ஆம் வகுப்பில் 93.85 சதவீதம் சிறைவாசிகளும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் மறுவாழ்வு, மறு சீரமைப்பு நடவடிக்கைகளில், சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் கல்வி முதன்மையானதாகவும், முக்கியமானதாகவும் உள்ளது. சிறைவாசிகளில் பெரும்பாலானோர் எழுத படிக்க தெரியாதவர்கள் என்பதால் சிறைகளில் பல்வேறு எழுத்தறிவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விடுதலைக்குப் பின்னர் சிறைவாசிகள் லாபகரமான பணிகளில் ஈடுபடும் வண்ணம் அவர்களை தயார்படுத்தும் நோக்கில் பல்வேறு கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட ஆரம்பப் பள்ளிகள். அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் மாவட்டச் சிறை (ம) பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றன.
2021-2022ம் கல்வி ஆண்டில், வெவ்வேறு சிறைகளை சேர்ந்த 7 பெண் சிறைவாசிகள் உட்பட மொத்தம் 58 சிறைவாசிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் கோரிக்கையின் படி, மாநில பள்ளிக் கல்வித்துறையால் சிறைவாசிகள் அந்தந்த சிறையிலேயே தேர்வு எழுதிட வழிவகை செய்யப்பட்டது. அவர்களில், 7 பெண் சிறைவாசிகள் உட்பட 56 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம், 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகளில், 96.55 சதவீதம் சிறைவாசிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போன்று, வெவ்வேறு மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளை சேர்ந்த 16 பெண் சிறைவாசிகள் உட்பட 242 சிறைவாசிகள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். அவர்களில் 14 பெண் சிறைவாசிகள் உட்பட 199 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 93,85 சதவீதம் சிறைவாசிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புழல் சிறைவாசியான சுபாஷ் காந்தி 546 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்திலும், சண்முக பிரியா, ராஜேந்திரன் 536 மதிப்பெண்கள் இரண்டாம் இடம், ஜாகீர் உசேன் 528 மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். இதே போல 10ஆம் வகுப்பு தேர்வில் மதுரை சிறைவாசி அலெக்ஸ் பாண்டியன் 428 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம், ஆரோக்ய ஜெயா 426 மதிப்பெண்கள் இரண்டாமிடம், புழலை சேர்ந்த ரமேஷ் 421 மதிப்பெண்கள் இடம் பெற்று அசத்தி உள்ளனர் என்று தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
-சுப்பிரமணியன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM