புது டெல்லி: ‘i1’ என்ற ஸ்மார்ட் கண் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது நாய்ஸ் நிறுவனம். இந்த கண்ணாடியின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாய்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் TWS இயர்பட்களை வடிவமைத்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் Wearable டிவைஸ்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் நாய்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிலையில், முதன்முறையாக ‘i1’ என்ற ஸ்மார்ட் கண் கண்ணாடியை தற்போது அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் இப்போது தான் ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்கள் பிரபலம் அடைந்து வருகின்றன. இந்நிலையில், ஸ்மார்ட் கண் கண்ணாடியை நாய்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலையும் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் கண் கண்ணாடி பயன்பாட்டை மக்களிடையே பரவலாக கொண்டு வரும் நோக்கில் இதை முன்னெடுத்துள்ளது நாய்ஸ்.
i1 சிறப்பு அம்சங்கள்: வழக்கமாக ஸ்மார்ட் கண் கண்ணாடிகள் என்றால் அதில் கேமரா இருக்கும். ஆனால் நாய்ஸ் லேப் வடிவமைத்துள்ள இந்த i1 ஸ்மார்ட் கண் கண்ணாடியில் கேமரா இடம் பெறவில்லை. முழுவதும் ஆடியோவை விரும்பி கேட்கும் பயனர்களுக்காக இந்த கண்ணாடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 சதவீத ஒலியில் 9 மணி நேரம் வரை ஆடியோவை பிளே செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.1 ப்ளூடூத் கனெக்டிவிட்டி இதில் உள்ளது. அதன் மூலம் போனையும் இந்த கண்ணாடியையும் லிங்க் செய்து கொள்ளலாம். அதோடு போன் அழைப்புகளை பெறவும், ரிஜெக்ட் செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளே ஆகும் மியூசிக்கை மேனேஜ் செய்யவும் முடியுமாம். வாய்ஸ் அசிஸ்டென்ட்டையும் இதில் ஆக்டிவேட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களை இதில் இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்கிளாஸ் லென்ஸ் மற்றும் ப்ளூ லைட் ஃபில்டரிங் திறன் கொண்ட டிரான்ஸ்பரண்ட் லென்ஸ் என மாற்றிக் கொள்ளும் வகையிலான லென்ஸ்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 47 கிராம். வாட்டர் ஃப்ரூப் உத்தரவாதத்துடன் வெளிவந்துள்ளது.
இந்த கண்ணாடியின் விலை ரூ.5,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்ஸ் வலைதளத்தின் மூலம் இந்த கண்ணாடியை பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம்.