ஜிஸ் ஜாய் இயக்கத்தில் ஆசிஃப் அலி, நிமிஷா சஜயன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டவர்கள் நடித்து சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் மலையாள த்ரில்லர் படமான ‘இன்னலே வரே’ பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா?
டெக்னாலஜியை வைத்து படம் நடித்த ஹீரோவை, டெக்னாலஜியை வைத்தே கடத்தி டெக்னிக்காகப் பணம் பறிப்பதுதான் ‘இன்னலே வரே’ (Innale Vare) படத்தின் ஒன்லைன்.
சினிமா ஹீரோவான ஆதி ஷங்கர் (ஆசிஃப் அலி) தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஒரு சாதாரண பெண்ணால் டெக்னிக்கலாகக் கடத்தப்படுகிறார். அவர், எதனால் கடத்தப்பட்டார்? அதுவும், தொடர் ஃப்ளாப்புகளைக் கொடுத்து கடனில் மூழ்கியிருக்கும் அவரை பணம் கேட்டு இன்னலைக் கொடுப்பது ஏன்? ஒரு மனிதனை எப்படியெல்லாம் பின் தொடர்ந்து கண்காணிக்க முடியும்? எப்படியெல்லாம் டெக்னாலஜியைப் பயன்படுத்தி பணம் பறிக்கமுடியும்? இதிலிருந்து ஹீரோ எப்படி மீள்கிறார்? இதுதான் படத்தின் கதைக்களம்.
நாயகன் ஆசிஃப் அலிக்கு மோஸ்ட் வான்டட் ஹீரோவுக்கான கெட்-அப் எதிர்பார்க்கும் அளவுக்கு அமையவில்லை என்றாலும் தனது நடிப்பால் அதற்கு ஈடு செய்ய முயற்சி செய்திருக்கிறார். அதுவும் கடத்தப்பட்டுத் தனி அறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒருவர் என்ன மாதிரியான உளவியல் பாதிப்புகளைச் சந்திப்பார் என்பதை தன் உணர்ச்சிகளின் வழியே அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். உடல் எடை மெலிந்து அவர் நடித்திருக்கும் காட்சிகளும் எதார்த்தமாக இருக்கின்றன. மற்றொரு நாயகனான ஆண்டனி வர்க்கீஸ் படத்தில் குறைவாகவே பேசினாலும் பார்வையாலே நம்மை மிரட்டுகிறார்.
நிமிஷா சஜயன், ரெபா மோனிகா ஜான், அதுல்யா சந்திரா எனப் படத்தில் மூன்று நாயகிகள். இதில் ரெபா மோனிகா கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இவர்களில் நிமிஷத்துக்கு நிமிஷம் நடிப்பால் நம் கண்களை ஆட்கொள்வது என்னவோ நிமிஷா சஜயன்தான். நாயகனுக்கும் டஃப் ஃபைட் கொடுக்கும் அளவுக்கு தன் பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். அதுவும், ஹீரோவைப் பேசி அழைத்துச் செல்லும் காட்சியில் தனது முகபாவங்களால் க்ளாப்ஸை அள்ளுகிறார்.
பெரும்பாலான காட்சிகள் அறைகளுக்குள்ளேயே எடுக்கப்பட்டிருந்தாலும், அந்த வட்டத்திற்குள்ளாகவே ஒளிப்பதிவில் நிறைய மேஜிக் செய்திருக்கிறார் பாகுல் ரமேஷ். நான்கு இசையமைப்பாளர்கள் கொண்ட ‘4Musics’ டீமின் பின்னணி இசையும் ஒரு த்ரில்லருக்குத் தேவையானதைச் செய்திருக்கிறது.
இயக்குநர் ஜிஸ் ஜாய் எடுத்துக்கொண்ட கதைக்களம் ஓகேதான். ஆனால், ஏற்கெனவே யூகிக்க முடிகிற ரிவெஞ்சை சஸ்பென்ஸ் வைக்கிறேன் என்ற பெயரில் இழுத்துக் கொண்டே சென்றது சறுக்கல். எதற்காகக் கடத்தினார்கள் என்ற பிளாஷ்பேக்தான் யார் மீது பரிதாபம் வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். அது இங்கே படத்தின் முடிவின்போது வெளிப்படுவதாலும், அத்தனை ஆழமான ஒன்றாக இல்லாததாலும், நாயகன் பக்கமே ஆதரவாக நிற்கத் தோன்றுகிறது.
டெக்னாலஜியை வைத்து படம் முழுக்க சுவாரஸ்யங்களால் நிரப்ப முயற்சி செய்திருக்கிறது திரைக்கதை. ஆசிஃப் அலிக்கும் நிமிஷா சஜயனுக்குமான ஃபைட் நம்மைப் பரபரப்பில் வைக்கிறது. ஆனாலும், ப்ளஸ்களை விட மைனஸ்களின் எண்ணிக்கைதான் அடிஷனல் ஷீட் கேட்கிறது.
அதிகாரத்திலோ அந்தஸ்திலோ இருக்கும்போது யாரையும் அலட்சியமாக நினைத்துப் புறந்தள்ளி விடக்கூடாது என்பதற்காக, குற்றங்களையும் தவறுகளையும் உணரவைப்பதற்காக, நாம் என்ன செய்தாலும் எப்போதுமே யாராலோ எவற்றாலோ கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம் என்ற அலெர்ட்டைக் கொடுப்பதற்காக, என இப்படியான ஒரு சில சுவாரஸ்யங்களுக்காக மட்டும் ’இன்னலே வரே’வுக்கு ஒரு லைக் போடலாம்.