சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடையில்லை என்றும், திட்டமிட்ட பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோல தணிகாச்சலம் என்பவரும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் முறையீடு செய்தார். அப்போது அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், எந்த செயல்திட்டத்தையும் அறிவிக்காமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து அனைத்து வழக்குகளும் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்குகளில் வாதங்கள் முடிந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என்றும், திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் கூறும்போது, “நாளை நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, தணிகாச்சலம், சண்முகம் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை இன்று விசாரித்த நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி, வழக்குகளில் எந்தவித முகந்திரமும் இல்லை என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்மூலம் பொதுகுழுக் கூட்டம் நடைபெறுவதை நீதிபதி உறுதி செய்துள்ளார்” என்றார்.