அதிமுகவுக்கு பொதுக்குழுவுக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே, அதிமுகவின் ஒற்றைத் தலைமை தொடர்பாக மோதல் நடந்துவருகிறது. இதையடுத்து, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி, சண்முகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், பொதுக்குழு அலுவல் நிகழ்வு குறித்து அஜெண்ட இதுவரை வெளியிடப்படவில்லை; பொதுக்குழு அஜெண்டா இல்லாமலேயே ஒற்றைத் தலைமை விவாதம் தொடங்கியுள்ளன. பொதுக்குழ்வை வழக்கமான முறையில் நடத்த ஆட்சேபனை இல்லை; தலைமையை மாற்றும் திருத்தங்களை செய்யக்கூடாது என்று மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர். மேலும், பொதுக்குழு நடத்தலாம் ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டுவரக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொது ஓ.பி.எஸ் சார்பில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
கடந்த டிசம்பரில் உட்கட்சித் தேர்தல் நடந்து ஒரு மனதாக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது; ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர்களுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. 23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இ-மெயில் வந்தது. கட்சி அலுவலகத்தில் இருந்து வந்த 23 வரைவு தீர்மானங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன். 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.
மேலும், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 வரைவு தீர்மானங்களின் நகல் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். ஒப்புதல் அளித்துள்ள வரைவு தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை தீர்மானம் இல்லை. கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யக்கூடாது என்ற மனுதாரரின் அச்சம் குறித்த தீர்மானம் அதில் இல்லை. இந்த 23 தீர்மானங்களைத் தவிர இனியும் புதிதாக தீர்மானங்களை சேர்க்கக்கூடாது. அதிமுக விதிகளுக்கு எதிராக செயல்பட மாட்டேன் எனவும் ஓ.பி.எஸ். சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
2017ல் பொதுக்குழு தீர்மானம் மூலம்தான் அதிமுக கட்சி விதிகள் திருத்தப்பட்டன என்று இ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட பொதுக்குழுவுக்கே அதிக அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அழைப்பு விடுத்துள்ளனர்.
பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம். இது நடக்கும், நடக்காது என உத்தரவாதமாக சொல்ல முடியாது. பொதுக்குழு எந்த முடிவையும் எடுக்கலாம். எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ பொதுக்குழுவால் முடியும், அதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கொள்கை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்துக்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது. நாளைய பொதுக்குழுவில் திருத்தம் நடக்கலாம், நடக்காமல் இருக்கலாம். பொதுக்குழுவில் பெரும்பான்மையான கருத்துக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம் ஆகும். அஜெண்டா இல்லாமல்தான் ஏற்கனவே பொதுக்குழுக்கள் நடத்தப்பட்டுள்ளன என வாதிடப்பட்டது.
மேலும், பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு; ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை. பெரும்பாலான உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தியுள்ளனர். பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட முடியும், பொதுக்குழு முடிவுகள் கட்சியினரை கட்டுப்படுத்தும். எந்த விதியையும், நீக்கவோ, சேர்க்கவோ 2665 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சட்ட விதிகள் திருத்தம் நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம். பொதுக்குழுவில் தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும், பெரும்பான்மையே முடிவு செய்யும். விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதுமானது. நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கூடாது என இ.பி.எஸ் தரப்பில் வாதிட்டனர்.
இதையடுத்து, ஒ.பி.ஸ் தரப்பில் இறுதி வாதம் முன்வைக்கப்பட்டது. அதில், கட்சியில்
எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்ட வேண்டும்.
பொதுக்குழுவில் முடிவுகளை காக்கின்ற அறங்காவலர்களாகத்தான் பிற நிர்வாகிகள் செயல்பட முடியும். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் பொதுக்குழுவுக்கு செல்ல முடியாது; நடக்கப்போவது என்ன என்பது ஒருங்கிணைப்பாளருக்கு முன்கூட்டியே தெரிய வேண்டும்.” என்று ஓ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது பொதுக்குழுவில் ஒரு விவகாரத்தை யாராவது திடீரென எழுப்பமாட்டார்களா என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு, ஒருங்கிணைப்பாளருக்கு தெரியமால் எந்த தீர்மானத்தையும் வைக்க முடியாது என்று ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர் சண்முகம் தரப்பில் இறுதி வாதம் முன்வைக்கப்பட்டது. அதில், பொதுக்குழுவில் செயல் திட்டத்தை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். பொதுக்குழுவில் சிலர் விருப்பத்திற்கேற்ப முடிவுகள் எடுக்க கூடாது என மனுதாரர் சண்முகம் வாதிட்டார்.
மேலும், மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் தரப்பில், பொதுக்குழுவில் அதிமுகவின் அடிப்படை கட்டமைப்பையே மாற்றும் விதமாக தீர்மானங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
வழக்கறிஞர் விஜய நாராயணன் இ.பி.எஸ் தரப்பில் இறுதி வாதத்தை முன்வைத்தார். அதில், “அதிமுகவின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றும் எண்ணம் இல்லை; சுரேன் பழனிசாமி, ஆதித்தன் போன்றோர் அதிமுக உறுப்பினர்களே இல்லை; அதிமுக பொதுக்குழுவிற்க் எதிரான வழக்கு நீதிமன்ற பணி நேரத்தைக் கடத்தும் விசாரணை; பொதுக்குழுவில் முன்கூட்டியே எப்படி முடிவு செய்ய முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுதாரர்கள் அனைவரும் பொதுகுழுவை நடத்தலாம் என்கின்றனர். கட்சி விதிகளில் மட்டும் திருத்தம் செய்ய மட்டுமே ஆட்சேபம் தெரிவிக்கின்றனர் என்று கருத்து தெரிவித்தார். பிறகு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கில் சற்று நேரத்தில் அவரது அறையில் வைத்து தீர்ப்பு வழங்குவதாகக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“