அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள திருமண மண்டபம் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் ஈடுபடுகின்றனர்.
பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை காலை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொதுக் குழுவிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் போரூர் உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் சுமார் 2,000 போலீசார் இந்த பொதுக்குழு கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
வானகரம் – அயனம்பாக்கம் சாலையில் ஏராளமான குடியிருப்புகள், தனியார் மருத்துவமனை, தொழிற்சாலைகள் இருப்பதால் ஏராளமான வாகனங்கள் இந்த பகுதியில் செல்லும். எனவே நாளை காலை பொதுக்குழு நடைபெறும்போது இந்த சாலை முற்றிலுமாக தடுப்புகள் வைத்து முடக்கப்பட்டு கனரக வாகனங்கள் ஏதும் செல்லாத வகையில் தடுக்கப்படும்.
குடியிருப்புவாசிகளின் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே இந்த சாலை அனுமதிக்கப்படும். பொதுக்குழுவில் கலந்து கொள்ள வரும் நிர்வாகிகள் அவர்களுக்கென்று உள்ள பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து வரவேண்டும். வாகனங்களில் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று முதலே ஸ்ரீவாரு மண்டபம் நுழைவாயில் பூட்டப்பட்டு முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இரு பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக சுமார் 2,000 போலீசார் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது திருமண மண்டபத்திற்குள் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர். பொதுக்குழு முடியும் வரை இந்த சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் மதுரவாயல் பைபாஸ் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் தற்போது ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM