ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே இன்று (21) அதிகாலை ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், 130 பேர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 255 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் மீட்புப்பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை பக்டிகா மாகாணத்தில் பதிவாகி உள்ளன.
நிலநடுக்கம் காரணமாக அங்கு இதுவரை 255 பேர் உயிரிழந்தனர் என்றும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதேவேளை,ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 119 மில்லியனுக்கும் அதிகமானோர் பூமி அதிர்ச்சியை உணர்ந்திருப்பதாக ஐரோப்பாவின் நில ஆய்வு மத்திய நிலையம் அறிவித்திருக்கிறது.