காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று (புதன்கிழமை) காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் 1000 பேர் வரை பலியானதாகவும், 1,500 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு பகுதியான பக்டிகா மாகாணத்தில்தான் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாகாணத்தில் மட்டும் 250-க்கும் அதிகமானவர்கள் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலநடுக்கத்தால் 1000-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ வசதிகளை தலிபான் அரசு முடுக்கிவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்று அவர் வலியிறுத்தியுள்ளார்.
ஆப்கனில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 20-க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.