லண்டன்,
இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக்கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்கள் அனைத்தும் வெறிச்சோடிப் போய் காணப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவை முடங்கி போய் இருக்கிறது. மேலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ரெயில்கள் இயக்கப்படாததால் ஆயிரக்கணக்கானோர் பஸ்கள், கார்களில் அலுவலகங்கள், மற்ற இடங்களுக்கு செல்கிறார்கள். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் வாடகை கார்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பஸ் நிறுத்தங்களில் ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ரெயில்வே ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தத்தால் ஆசிரியர்கள், மருத்துவர்கள், கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் என அனைவருக்கும் “அதிருப்தியான கோடைகால” தொடக்கம் என்று தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும் இந்த வேலை நிறுத்தம் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற தொழில்துறை நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் பணவீக்கத்தை 10 சதவீதம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே போராட்டத்தை கைவிட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறும்போது, இங்கிலாந்து மக்கள் மற்றும் ரெயில் பணியாளர்களின் நலனுக்காக ஒரு விவேகமான சமரசத்துக்கு வர வேண்டிய நேரம் இது என்றார்.