கடந்த 10 நாள்களுக்கும் மேலாக எதிர்க்கட்சியான அ.தி.மு.க கூடாரம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பின்னர் இருந்ததுபோல, இப்போதும் இரு அணிகளாக நிர்வாகிகள் மோதிக் கொண்டிருக்கிறார்கள். 23-ம் தேதி பொதுக்குழு நடக்குமா? என்பது அன்றைய தினம் வரை கேள்விக்குறியாகத்தான் சென்றுகொண்டிருக்கும்.
பொதுக்குழுவை நிறுத்த வலியுறுத்தி இரண்டு வெவ்வேறு வழக்குகள் நடந்துவருவதோடு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், பொதுக்குழுவைத் தள்ளிவைக்குமாறு எடப்பாடிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார். இந்தச் சூழலில், பொதுக்குழுவை எப்படியேனும் நடத்தி, எடப்பாடியைப் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்திட வேண்டும் என்று எடப்பாடி தரப்பில் மெனக்கெட்டு வருகிறார்கள்.
பிரச்னைகள் எதை நோக்கிச்செல்கிறது? என்று அ.தி.மு.க டெல்டா மாவட்ட மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். “கண்டிப்பாக எடப்பாடி கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுவது உறுதி என்றாகிவிட்டது. இது இன்று நேற்று தொடங்கப்பட்ட திட்டமல்ல, ஓராண்டுகளுக்கு முன்பாகவே இதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. சட்டமன்றத் தேர்தல் காரணமாக அப்போது தள்ளிவைத்த அந்த மூவ்தான் இப்போது செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.
எங்களைப் போன்ற நிர்வாகிகளுக்கு யார் ஒற்றைத் தலைவராக வந்தாலும் பிரச்னையில்லை. எனினும், எடப்பாடி முதல்வரான பின்னர், அணிகள் இணைந்ததில் முக்கிய பங்காற்றினார். பின்னர் இரட்டைத் தலைமை இருந்தபோதும், முடிவுகளை எடுத்தது என்னவோ எடப்பாடிதான். வெறும் கையெழுத்தை மட்டுமே ஓ.பி.எஸ் போட்டுவந்தார்.
நான்காண்டுகளாக எல்லா முடிவுகளை எடுத்ததால், இனி ஒற்றைத் தலைவராக இருந்துகொண்டு அதனைச் செய்வதுதான் எடப்பாடியின் எண்ணம். ஆனால், முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் போன்றவற்றில் ஏமாந்ததுபோல இதிலும் ஏமாந்தால் அரசியல் எதிர்காலமே நாசமாகிவிடும் என்பது பன்னீரின் அச்சம். எனினும், ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இப்போது இல்லையென்றாலும், கண்டிப்பாக எடப்பாடிதான் பொதுச்செயலாளராக அமரப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.
ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காக ஏற்கெனவே கட்சி விதிகள் இரண்டுமுறைத் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. பொதுக்குழுவில் மீண்டும் அவ்விதியில் திருத்தம் செய்து, மீண்டும் பொதுச் செயலாளர் பொறுப்பைக் கொண்டுவந்து, அதற்குத் தேர்தல் நடத்தி பொதுச் செயலாளராக ஆகுவார் அல்லது பொதுக்குழுவிலேயேகூட அப்பதவியை எட்டிப்பிடிப்பார் என்பது உறுதி!” என்றனர்.
அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் பேசியபோது, “மன்னராட்சிப் படி நடக்கும் கட்சி தி.மு.க என்றால், மக்களாட்சிப்படி நடப்பது அ.தி.மு.க. இந்திய அரசியல் கட்சிகளிலேயே, அதிகாரப்பரவலை, எல்லோருக்கும் பிரதிநிதித்துவத்தைக் கொடுத்த ஒரே கட்சி அ.தி.மு.க-தான். சாதாரண அடிமட்டத் தொண்டரும் உச்சப்பதவிக்கு வரக்கூடிய கட்சி இதுமட்டும்தான்.
திராவிடம், சமூகநீதி, தமிழ்த்தேசியம், ஆன்மிகம் என எல்லா விஷயங்களும் கலந்த ஒரே இயக்கமும் எங்கள் கட்சிதான். இப்படிப்பட்ட அ.தி.மு.க என்றும் பலவீனம் அடைந்துவிடக்கூடாது, தொடர்ந்து பயணிக்கத் தலைமை வேண்டும் என்ற எண்ணத்தில் ஒட்டுமொத்தத் தொண்டர்களும் எடப்பாடியை முன்மொழிகிறார்கள், நாங்களும் வழிமொழிகிறோம்.
மேல்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒற்றைத் தலைமையாக, பொதுச் செயலாளராக எடப்பாடி முன்னெடுத்துச் செல்லும்போது, நாங்களும் அதற்கு உடன்படுகிறோம். எடப்பாடிதான் சிறந்த தலைமை என்ற எண்ணத்துக்குக் கட்சியினர் வந்துவிட்டோம். அதனால், எடப்பாடி அண்ணனைப் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்து, அடுத்தக்கட்டத்துக்குச் செல்லத் தயாராக இருக்கிறோம்” என்றார்.