சென்னையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் எவ்வித தடையுமில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.
பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் முறையீடு செய்தார். அப்போது அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், எந்த செயல்திட்டத்தையும் அறிவிக்காமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலை விசாரிக்கப்பட்டது. ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் சண்முகம் தரப்பினர் தங்களது வாதங்களை முன் வைத்தனர். காரசார வாதமாக இது அமைந்தது. நீண்ட வாதங்களுக்கு பின் மாலையில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டு மணி நேர இடைவெளிக்கு பின்னர், அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த உத்தரவில், “அனைத்து தரப்பினரும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஒருங்கிணைப்பாளரும், மற்ற மனுதாரர்களும் கட்சி விதிகளை திருத்தம் செய்ய, குறிப்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைப்பது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றவே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான முகாந்திரத்தை நிரூபிக்கவில்லை. இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த நீதிமன்றம் யூகித்து முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது.
கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை. நிர்வாக வசதிக்காக சட்ட திட்டங்களை கட்சியால் திருத்தம் செய்ய முடியும்.
பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கட்சிதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதனால், எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை.
வழக்கில் ஒ.பி.எஸ்., இ.பி.எஸ்., பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஜூலை 11ம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளை பொதுக்குழு நடத்த தடையில்லை என நீதிமன்றம் உத்தரவு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM