டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் இளம் கிரிக்கெட் வீரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 21 வயது பேட்ஸ்மேனான ஆர்யா சேத்தி கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, மாநில கிரிக்கெட் வீரரான ஆர்யா அந்த அணியின் பயிற்சியாளரால் தாக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தை கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவித்தபோது, பயிற்சியாளருக்கு ஆதரவாக பேசிய நிர்வாகிகள், இது வெளியே தெரியவந்தால் கொலை செய்துவிடுவோம் என ஆர்யாவை மிரட்டியுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மஹிம் வர்மாவை ஆர்யாவின் தந்தை தனியாக சந்தித்து பேசியுள்ளார். அப்போது மஹிம் வர்மா ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் இல்லையெனில் அவர்கள் தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை கெடுத்துவிடுவார்கள் என்று மிரட்டியதாக, 21 வயது பேட்ஸ்மேனான ஆர்யா சேத்தியின் தந்தை ரவி சேத்தி கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து போலீசர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மஹிம் வர்மா உட்பட 7 உறுப்பினர்கள் மீது சதி, மிரட்டி பணம் பறித்தல், பணம் கேட்டு மிரட்டல், தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.மஹிம் வர்மா பிசிசிஐயின் முன்னாள் துணைத்தலைவர் பொறுப்பு வகித்தவர் ஆவார்.