இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா இன்று (22) பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கேள்வி: நீங்கள் இதை எவ்வாறானதொரு கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்?
பதில்: நான் உண்மையில் நாட்டுக்காக உழைக்கவே இங்கு வந்தேன். உறுதிமொழி எடுப்பதற்கு முன், சபாநாயகரிடம் எனது சொத்துக்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தேன். எனது வரி அனுமதி சான்றிதழையும் சபாநாயகரிடம் கையளித்தேன். அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்.
பிரச்சினை இருந்ததாலேயே நான் பாராளுமன்றத்துக்கு வந்தேன். இப்போது என் கடமை பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான். அதைச் செய்வதன் மூலம் பிரச்சனையைச் சமாளிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.
கேள்வி: உங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அந்தஸ்த்து வழங்கக் கூடாது என்று ஒரு குழுவினர் நீதிமன்றத்தை நாடினார்கள்? நீங்கள் சவால்களுக்கு மத்தியில் தான் இதற்கு வந்தீர்களா?
பதில்: சவால்கள் இருக்கும்போது வருவது தானே அழகு. ஒரு நதி கூட பாயும் போது தான் அது அழகாக காட்சியளிக்கும் இல்லையா?
கேள்வி: உங்களால் இலங்கைக்கு முதலீட்டை கொண்டு வர முடியுமா?
பதில்: ஆம். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் என்னால் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன். உண்மையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நான் முதலீட்டு சபையின் தலைவராக இருந்தேன். அதனால் நான் அதை கொண்டு வர முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனென்றால் தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் போகும் இந்த சந்தர்ப்பத்தில், நான் உண்மையில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வந்துள்ளேன்.
கேள்வி: நீங்கள் தனியார் துறையில் ஒரு பெரிய தொழிலதிபர். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இளைஞர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: அவர்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் நான் அறிவேன். அதனால் அந்த சவாலை என்னால் சமாளிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
கேள்வி: பசில் ராஜபக்க்ஷ உங்களுடன் கதைக்கவில்லைய
பதில்: ஆம், கதைத்தார். அவருக்கும் நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏனென்றால் எனக்கு வழங்கப்பட்ட பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்பட இருந்தது. ஆனால் அவரது சொந்த விருப்பத்தின் பேரில் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக நான் அவரை மதிக்கின்றேன்.
கேள்வி: மஹிந்த ராஜபக்க்ஷவும் இன்று உங்களை வாழ்த்த வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது?
பதில்: நான் அவரை இன்னும் பாராளுமன்றத்தில் காணவில்லை.
கேள்வி: தற்போது ஜனாதிபதி ஒரு பக்கமும், பிரதமர் இன்னொரு பக்கமும் இருக்கின்றார்கள். இந்தப் பயணத்தில் நீங்கள் இதை எப்படி சமாளித்து நடுநிலையாக பயணிக்கப் போகின்றீர்கள்?
பதில்: இங்கு அனைத்துத் தரப்பினரும், எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால்தான் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். நாம் நாட்டை அந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
கேள்வி: உங்களுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவி …இது வரையில் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதா?
பதில்: நான் நினைக்கின்றேன் எனது திறமைக்கு ஏற்ற அமைச்சுப் பதவி எனக்கு கிடைக்கும் என்று, அதற்கமைய கிடைத்தால் அதை நான் செய்யத் தயாராக இருக்கிறேன்.
கேள்வி: ஒரு மூழ்கும் கப்பலில் நீங்கள் ஏறி இருக்கின்றீர்கள் என்று நீங்கள் நினைக்கவில்லையா ?
பதில்: எல்லோருக்கும் நீரில் மூழ்குவது போல் தெரிகிறது. ஆனால் எனக்கு மூழ்குவது போல் தெரியவில்லை. நான் இதை வேகமாக நகரும் கப்பலாகவே பார்க்கிறேன் என்று அவர் ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்தார்…..
தம்மிக்க பெரேரா இன்று (22) காலை சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்படத்தக்கது.