சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும், அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் ‘பேரன்ட்டீனிங்’ என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள்.
பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்து கொண்ட தகவல்கள், அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால், விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.
டாக்டர் ஷர்மிளா
தோற்றத்தில், சிந்தனைகளில் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளும் பருவம் டீன் ஏஜ். எதிர்கால வளர்ச்சிக்கான அஸ்திவாரமும் அந்த வயதில்தான் போடப்படுகிறது. எலும்புகள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும் ஹார்மோன்களின் சமநிலைக்கும் உறுப்புகள், மிக முக்கியமாக மூளையின் முழுமையான செயல்திறனுக்கும் டீன் ஏஜில் முறையான உணவுப்பழக்கம் பின்பற்றப்பட வேண்டியது முக்கியம். அந்த வயதில் அவர்களுக்கு அடிப்படையாக, அவசியமாகத் தேவைப்படும் இரண்டு ஊட்டங்கள் கால்சியமும் இரும்புச்சத்தும்.
டீன் ஏஜில், தோற்றம் குறித்த கவலை அவர்களுக்குப் பெரிதாகத் தெரிவதால், உணவு விஷயத்தில் சுய விருப்பத்தின் பேரில் முடிவெடுக்கிறார்கள்; முறையற்ற உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். பழங்கள், காய்கறிகள், தானியங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கொழுப்பும் எண்ணெயும் உப்பும் கெமிக்கலும் அதிகம் சேர்த்த வெளி உணவுகளையும், குளிர்பானங்களையும் விரும்பி எடுத்துக்கொள்கிறார்கள். இத்தகைய உணவுப்பழக்கம் பிற்காலத்தில் பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதே பெரும்பாலான பெற்றோரின் கவலை. ஆனாலும் அவர்கள் சொன்னால் பிள்ளைகள் கேட்கிறார்களா என்ன? பொறுமையான, பக்குவமான அணுகுமுறையால்தான் இதை பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும் டியர் பேரன்ட்ஸ்….
என்ன சாப்பிட வேண்டும்?
உங்கள் பிள்ளைகளின் எனர்ஜி தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், பேலன்ஸ்டு உணவுகளாக இருக்க வேண்டும். அதன்படி 5 வகையான உணவுப் பிரிவுகளில் இருந்து அவை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவை…
காய்கறிகள், பழங்கள்
உருளைக்கிழங்கு, பிரெட், சாதம் உள்ளிட்ட கார்போஹைட்ரேட்
பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், முட்டை, இதர புரதங்கள்
பால் பொருள்கள்
எண்ணெய் மற்றும் ஸ்பிரெட் வகைகள்
டீன் ஏஜ் பிள்ளைகளிடம் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை எப்படி ஊக்கப்படுத்துவது?
டீன் ஏஜில், தங்கள் தேவைகளைத் தாங்களே முடிவு செய்யும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கும். அதன் பிரதிபலிப்பு உணவுத் தேர்விலும் தெரியும். அந்த நிலையில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை உருவாக்க நீங்கள் செய்ய வேண்டியவை….
ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடும் ரோல் மாடலாக நீங்கள் மாற வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கும் சூழலை வீட்டுக்குள் உருவாக்க வேண்டும்.
பாசிட்டிவ்வாகவும் சலிப்பை ஏற்படுத்தாமலும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் பற்றிய உரையாடலை, அவர்களுடன் நிகழ்த்த வேண்டும்.
ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் என்ன செய்யும்?
டீன் ஏஜில் கன்னாபின்னாவென சாப்பிடுவது, டயட் என்ற பெயரில் மிகக்குறைவாகச் சாப்பிடுவது என இரண்டுமே அவர்களது உடல் ஆரோக்கியத்தை மட்டுமன்றி, மனநலனையும் பெரிதும் பாதிக்கும். அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகும் அந்த பாதிப்பு தொடரும். எனவே அது குறித்து உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளிடம் தினமும் பேசுங்கள்.
பெண்களின் வளர்ச்சி எப்போது முடிகிறது?
பெண்களின் வாழ்க்கையில், பருவமடைதலுக்கான அறிகுறிகள் 10 வயதிலிருந்து தொடங்குகின்றன. மாதவிலக்கு சராசரியாக பன்னிரண்டரை வயதில் இருந்து தொடங்குகிறது. பூப்பெய்தியதில் இருந்து இரண்டு வருடங்களுக்குள் பெண் பிள்ளைகளின் பெரும்பாலான வளர்ச்சி முடிந்து விடுகிறது, அதாவது அவர்களது 14- 15 வயதுக்குள்.
ஆண்களின் வளர்ச்சி எப்போது முடிகிறது?
ஆண் பிள்ளைகள் பருவமடைவது என்பது, பெண்களின் பருவ வயதைவிட 2 ஆண்டுகள் தாமதமாக நடக்கிறது. அதாவது அவர்களது 12- 13 வயதில். ஆண்களின் உடல் வளர்ச்சி என்பது பல ஆண்டுகள் தொடரும். அதாவது அவர்களது உச்சபட்ச உயரமே 18 வயது வரை தொடர்ந்து கொண்டிருக்கும்.
டீன் ஏஜில் செய்யும் தவறான 4 உணவுப்பழக்கங்கள்
காலை உணவைத் தவிர்ப்பது
இந்தக் கட்டுரையில், என்ன சாப்பிட வேண்டும் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் தவிர்த்து மற்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவது.
அடிக்கடி வெளியிடங்களில் சாப்பிடுவது
பாட்டில் குளிர்பானங்கள் அதிகம் குடிப்பது
டீன் ஏஜ் உணவுப்பழக்கத்தை மேம்படுத்துவது எப்படி?
வீட்டுக்குள் சரியான உணவுப்பழக்கம் பின்பற்றப்பட வேண்டும். அதாவது சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவது என்பது குடும்ப வழக்கமாக மாற வேண்டும்.
காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகள் தினமும் மெனுவில் இடம்பெற வேண்டும்.
பழங்கள், சாலட், நட்ஸ் போன்றவற்றைச் சாப்பிடுவதை வீட்டில் உள்ள அனைவரும் பின்பற்றினால்தான் பிள்ளைகளும் பின்பற்றுவார்கள்.
டேக்ஹோம் மெசேஜ்
ஆரோக்கியமான உணவுப்பழக்கம் என்பது டீன் ஏஜ் பிள்ளைகளின் உடல் வளர்ச்சிக்கு மட்டுமன்றி, மனநலனுக்கும், விளையாட்டு, படிப்பு, பிற செயல்பாடுகளில் சிறப்பாக ஈடுபடவும் எவ்வளவு அவசியம் என்பதைப் புரியவையுங்கள். சமைக்கும் உணவுகளில் உள்ள சத்துகள் பற்றியும் அவற்றின் நன்மைகள் குறித்தும் பிள்ளைகளிடம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருங்கள்.
ஆஷ்லி
”எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ‘நீ சாப்பிடுவியா, மாட்டியா…. இவ்ளோ ஒல்லியா இருக்கியே….’ என்ற கேள்வியைத்தான் அதிகம் கேட்டிருக்கிறேன். என்னை எல்லோரும் எடை கூடச் சொல்லிக்கொண்டிருந்தபோது, என் தோழிகள் சிலர் எடையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.
சிலர் கண்டதையும் சாப்பிடுவார்கள். சிலர் பார்த்துப் பார்த்து சாப்பிடுவார்கள். எனக்குத் தெரிந்து என் தோழிகள் பலருக்கும் தோற்றத்தைப் பற்றிய கவலை பெரிதாக இருந்ததால் சரியாகவே சாப்பிடாமல் இருந்து, அதன் விளைவாக மனநலனைக் கெடுத்துக் கொண்டதைப் பார்த்திருக்கிறேன். என் அம்மா டாக்டர் என்பதால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தியே வளர்த்தார்.
டீன் ஏஜில் சரியான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற என்னவெல்லாம் செய்யலாம்?
நீங்கள் சாப்பிடுவது, உங்கள் ஆரோக்கியத்துக்கு என்ற எண்ணத்தை மனதில் பதிய வையுங்கள். தோற்றமெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.
பசியெடுக்கும்போது சாப்பிடுங்கள்.
வேண்டாவெறுப்பாகச் சாப்பிடாமல், மனதார சாப்பிடுங்கள்.
எந்த உணவையும் வெறுத்து ஒதுக்காதீர்கள். எல்லாவற்றையும் முயற்சி செய்யுங்கள்.
– ஹேப்பி பேரன்ட்டீனிங்!