அலிகார்: உத்தர பிரதேசம் அலிகாரில் நடைபெற்ற போலீசாரின் கொடி அணிவகுப்பில் புல்டோசர்கள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் சமூக விரோதிகள், கிரிமினல் குற்றவாளிகள், கலவரங்களில் ஈடுபடுவோர்கள் சட்டவிரோதமாக கட்டிய வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடித்துத் தள்ளப்படுகின்றன. இந்நிலையில், அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அலிகாரில் கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.
இதில் போலீஸ் போஸ்ட் மற்றும் வாகனங்கள் எரிக்கப்பட்டன. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் சமூக விரோதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் பதற்றமான இடங்களில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்துவது வழக்கம். அதேபோல, அலிகாரில் திங்கட்கிழமை போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பில் புல்டோசர்கள் இடம் பெற்றன. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸ் கொடி அணிவகுப்பில் புல்டோசர்கள் இடம்பெறவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் சிலர் தெரிவித்தாலும் அணிவகுப்பில் புல்டோசர் இடம்பெற்ற புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. பெயர் வெளியிட விரும்பாத அலிகாரின் கோமத் சவுக் பகுதிவாசி ஒருவர் கூறுகையில், ‘‘கலவரம் நடந்த நிலையில், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த புல்டோசர்களுடன் போலீசார் அணிவகுத்து வந்தனர். கடைக்காரர்கள் பீதியடையந்து கடைகளை மூடினர். எனினும், போலீசார் எந்தக் கட்டிடத்தையும் இடிக்கவில்லை’’ என்றார்.