Thanjavur Police dodge Andhra students without filing FIR: தனியார் விடுதி அறையில் வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் போன்கள், லேப்டாப்கள் என ரூ.3.85 லட்சம் பெறுமான எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் திருடுபோய்விட்டதாக பாதிக்கப்பட்ட ஆந்திர மாணவர்கள் புகார் அளித்து மூன்று நாட்கள் ஆகியும், இதுவரை எப்.ஐ.ஆர் போடாமல் அலைக்கழித்து வருகின்றனர் தஞ்சையை அடுத்துள்ள வல்லம் காவல் நிலைய போலீஸார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர்கள் சாய் கிருஷ்ணா (20), சாய் வர்தன் (20) மற்றும் கணேஷ் (20). தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்துவரும் இம் மூவரும் பல்கலைக் கழகத்திற்கு எதிர்புறம் அமைந்துள்ள கே.ஆர்.ஆர் மேன்சன் என்ற தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: மேகதாது அணை குறித்து காவிரி ஆணையத்தில் விவாதிக்க கூடாது: கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி இரவு போதுமான காற்று இல்லாததால் தங்களது அறை கதவை தாழிடாமல் படுத்துவிட்டு மறுநாள் (20-ம் தேதி) காலை எழுந்த அம் மாணவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
அவர்களது அறையில் இருந்த விலை உயர்ந்த 2 ஆப்பிள் போன்கள், 3 லேப்டாப்கள் மற்றும் பணப்பையை காணவில்லை. அப் பொருள்கள் அனைத்தும் திருடுபோயிருந்தன. அதிர்ச்சியடைந்த அம் மாணவர்கள் இதுபற்றி வல்லம் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று இதுபற்றி புகார் மனு அளித்தனர்.
புகார் அளித்து மூன்று நாட்கள் ஆகியும், இதுவரை போலீஸார் எப்.ஐ.ஆர் போடவில்லை. அவ்வளவு ஏன்? சம்பவ இடத்தை இதுவரை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்யவில்லை. அம் மாணவர்களை ‘இன்று வா, நாளை வா’ எனக்கூறி அலைக்கழித்து வருகின்றனர் வல்லம் காவல் நிலைய போலீஸார். அதனால் அம் மாணவர்கள் மூவரும் மிகவும் நொந்து போயுள்ளனர்.
“போதுமான காற்று வசதி இல்லாததால் வழக்கமாக அறைக் கதவை பூட்டுவதில்லை. விடுதியின் வெளி கேட் பூட்டப்பட்டிருக்கும். அதனால் வழக்கம்போல் அன்றைய தினம் இரவு அறைக் கதவை திறந்து வைத்த நிலையில் நாங்கள் படுத்து தூங்கிவிட்டோம். அதிகாலையில் எழுந்தபோது அங்கிருந்த 2 ஆப்பிள் போன்கள், 3 லேப்டாக்கள் மற்றும் பணப்பையை காணவில்லை. அந்த பையில் ரூ.5,000 இருந்தது,” என்கிறார் சாய் கிருஷ்ணா.
புகார் அளித்து மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை போலீஸார் எப்.ஐ.ஆர் போடவில்லை. சம்பவ இடத்தை இதுவரை நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை. ‘இன்று வா, நாளை வா’ எனக்கூறி போலீஸார் அலைக்கழித்து வருகின்றனர் என்கிறார் சாய் கிருஷ்ணா மிகுந்த வருத்தத்துடன்.
திருடுபோன பொருள்களின் ஐஎம்ஐஇ எண்களை எங்களது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளோம். போலீஸார் கொஞ்சம் முயற்சி செய்தாலே அந்த எண்களைக் கொண்டு திருடுபோன பொருள்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். எப்.ஐ.ஆர் போடாவிட்டால் கூட பரவாயில்லை. திருடுபோன எங்களது பொருள்களை கண்டுபிடித்து தந்தால் அதுவே போதும் என்கிறார் சாய் கிருஷ்ணா.
எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்